`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி? | controversy about ias officers transfers

வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (23/02/2019)

கடைசி தொடர்பு:11:08 (23/02/2019)

`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி?

தேர்தல் பணியில் நேரடித் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் பதவிகளில், ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களையே மாறி மாறி நியமித்துள்ளதால், நாடாளுமன்றத் தேர்தலின்போது, பல மாவட்டங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் அதிகாரிகள் நடந்து கொள்ள வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சியினரிடம் அச்சம் எழுந்துள்ளது. 

தலைமை செயலகம்


புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியைத் தவிர்த்து, தமிழகத்தில் 32 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில், அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது அவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படுகின்றனர். இத்தகைய அதிகாரிகள், அமைச்சர்களின் கையசைப்புக்கு ஏற்ப, எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றுகின்றனர்.ஆளுங்கட்சியினருடன் ஒத்துப் போகும் ஒரே காரணத்தால், ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஆட்சியர் பொறுப்பை வகித்து, வலுவாகச் சம்பாதித்து விடுகின்றனர். இதன் காரணமாக, நேரடியாக ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரிகளும், பணி மூப்பின் அடிப்படையி்ல ஐ.ஏ.எஸ் அந்தஸ்து பெற்றவர்களும், ஆட்சியராக முடியாமல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

தமிழக அரசு


இதற்கு முடிவு கட்ட வேண்டுமென்று, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தரப்பில், முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரிடம் ஆறு பரிந்துரைகள் கொண்ட கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,‘ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்குள் கலெக்டர் பணியிடத்தை வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள், அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே ஒரு அதிகாரியை கலெக்டராக பணியில் இருக்க அனுமதிக்க வேண்டும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் உள்ளிட்ட கூடுதல் ஆட்சியர் பணியிடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பது உட்பட ஆறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.  ஆனால், தமிழகத்தில் இப்போதும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களே மாறி மாறி வெவ்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். உதாரணமாக, ஈரோடு ஆட்சியராக இருந்த பிரபாகரன், தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும், அங்கிருந்த கதிரவன், ஈரோடு மாவட்ட ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோன்று, மதுரையில் பல ஆண்டுகளாக ஆட்சியராக இருந்த வீரராகவராவ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், அந்தப்பதவியில் இருந்த நடராஜன், மதுரைக்கும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். 

தேர்தல் ஆணையம்


வீரராகவராவுக்கு முன்பாக மதுரை ஆட்சியராக இருந்த சுப்ரமணியன், சென்னையில் வேறு ஒரு பணியிடத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கிருந்து மீண்டும் விழுப்புரம் ஆட்சியராக வந்து, இன்று வரை அந்தப் பணியில் தொடர்கிறார். கே.எஸ்.பழனிச்சாமி, தேனி ஆட்சியராக இருந்து, திருச்சி ஆட்சியராகி, அங்கிருந்தும் மாறி, இப்போது திருப்பூர் ஆட்சியராக பணியில் உள்ளார். கடலூர் ஆட்சியராக இருந்த சுரேஷ்குமார், இப்போது நாகப்பட்டினம் ஆட்சியர். கோவை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் என நான்கு மாவட்டங்களில் பத்தாண்டுகளாக ஆட்சியர் பணியில் இருந்த ஹரிஹரன், சமீபத்தில் தான் அந்தப் பதவியை விட்டுக் கொடுத்தார். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருந்ததால், கோவையில் இரு முறை ஆட்சியராகும் வாய்ப்புப் பெற்றார். அதே காரணத்துக்காக, தனது துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்புச் செயலர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிக் கொடுத்திருந்தார் அமைச்சர் வேலுமணி.

வேலுமணி - ஐ ஏ எஸ் அதிகாரி ஹரிஹரன்

இப்போது அங்கிருந்து, சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் என்ற ‘வெயிட்’ ஆன பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்டுள்ளார். இதுவும் அதே துறையின் கீழேயே வருகிறது. ஆக மொத்தத்தில், ஆளுங்கட்சிக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே, ‘பசையுள்ள’ பதவிகளில் தொடர்கின்றனர்.துறைத்தலைமைப் பொறுப்புகளில் குறிப்பிட்ட சில அதிகாரிகள், பல ஆண்டுகளாக நீடிப்பதால் ஊழலும், முறைகேடும் அதிகமாக நடப்பதற்கு மட்டுமே வாய்ப்புண்டு. ஆனால், தேர்தல் பணிகளில் நேரடித் தொடர்புடைய  மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் போன்ற பணியிடங்களில், ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களை நியமிக்கும்போது, தேர்தலிலும் பலவிதமான முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. ஆளுங்கட்சியினரின் பரிந்துரையில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதில் துவங்கி, வேட்புமனுக்களை ஏற்பது அல்லது நிராகரிப்பது, பணப்பட்டுவாடாவைத் தடுக்காமல் அனுமதிப்பது, வீடியோ எடுக்க வேண்டுமென்பதைப் பெயரளவில் நடைமுறைப்படுத்துவது, ஆளுங்கட்சிக்கு எதிரான புகார்களை உதாசினப்படுத்துவது எனப் பலவிதங்களிலும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக நடந்து கொள்வதற்கு வாய்ப்புள்ளது. 

ஐ ஏ எஸ் அதிகாரி வீர ராகவ ராவ்

உச்சக்கட்டமாக, ஒரு சில தொகுதிகளில், வெற்றி தோல்விக்கான வாக்குவித்தியாசம் குறைவாக இருக்கின்ற சமயங்களில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக முடிவெடுத்த முன்னுதாரணங்களும் தமிழகத்தில் நிறையவே உள்ளன. இதற்காகவே, தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில், அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை ஆட்சியர் உட்படத் தேர்தல் பணி தொடர்பான பணிகளில் நியமித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மாநகராட்சி துணை ஆணையர் என மிக முக்கியமான பொறுப்புகளில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே நியமித்து இருப்பது, எதிர்க்கட்சியினரிடமும், மாற்று சமுதாயத்தினரிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு சில அதிகாரிகள், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகப் புகாருக்கு உள்ளானவர்கள்.

இவ்வாறு, தமிழகத்தில் மாவட்டங்கள் மாறி ஆட்சியராகப் பணியில் தொடர்பவர்கள், பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரைப் பட்டியலிட்டு, அவர்களை மாற்றுவதற்குத் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்பதற்கு தி.மு.க தயாராகி வருகிறது. இதற்காக, அக்கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள், பல்வேறு தகவல்களையும் திரட்டி வருவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.நம்மிடம் பேசிய தி.மு.க தகவல் தொழில் நுட்ப நிர்வாகி ஒருவர், ‘‘தேர்தல் பணி தொடர்புடைய அதிகாரிகள், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினால், அவர்களை மாற்ற வேண்டுமென்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அ.தி.மு.க ஆட்சியாளர்கள், இங்குள்ள மாவட்ட ஆட்சியரை வேறு ஒரு மாவட்டத்துக்கு மாற்றி, அங்குள்ள ஆட்சியரை இங்கு மாற்றி, தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியுள்ளனர்.

இவர்கள் எல்லோருமே எல்லா வகையிலும், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக நடப்பார்கள் என்பது திட்டவட்டம். இந்த அதிகாரிகளில் பலர், ஏற்கெனவே நன்றாகச் சம்பாதித்து விட்டனர். இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி செய்யும் எல்லாவிதமான ‘தில்லுமுல்லு’களுக்கும் உதவுவதன் மூலமாகவும், அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரையிலும் பசையுள்ள பதவிகளில் தொடர முயல்வர் என்பதும் உறுதி. அதனால், இத்தகைய அதிகாரிகளைப் பட்டியலிட்டு வருகிறோம். தேர்தல் ஆணையத்திடம் பட்டியலைக் கொடுத்து மாற்றக்கோருவோம். இல்லாவிட்டால், ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை அணுகுவோம்’’ என்றார்.


எதிர்க்கட்சியினரின் அதிருப்தி ஒரு புறமிருக்க, குறிப்பிட்ட சில அதிகாரிகளை மட்டும், மீண்டும் மீண்டும் ‘வெயிட் போஸ்ட்டிங்’கில் நியமித்து வருவதில், பெரும்பான்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொந்தளிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவ்விரு தரப்பினரின் கோபமும் எப்படி எதிரொலிக்கப் போகிறதோ...தெரியவில்லை.


[X] Close

[X] Close