இலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்! - சுங்கத்துறை அதிரடி | rameswaram Customs seized 1000 kg beedi leaves

வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (23/02/2019)

கடைசி தொடர்பு:13:09 (23/02/2019)

இலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்! - சுங்கத்துறை அதிரடி

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலை மூட்டைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலை.

தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்குக் கஞ்சா கடத்துவது சமீபகாலமாக அதிக அளவில் நடந்து வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் கஞ்சா இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பல்வேறு பகுதிகளுக்கு பீடி இலைகளில் சுற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஏதுவாகப் பீடி சுற்றும் இலைகளும் தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலர்கள் நேற்று இரவு ராமேஸ்வரம் சங்குமால் கடலோரப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் நிலையில் நின்றுகொண்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தைச் சோதனையிட்டனர். அதில் மூட்டை மூட்டையாகப் பீடி சுற்றப் பயன்படுத்தும் இலைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாகனத்தின் ஓட்டுநர் செல்வம் மற்றும் அதில் இருந்த மற்றொரு நபரான கார்த்திக் ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், இவை இலங்கைக்குக் கடத்துவதற்காக தூத்துக்குடி பகுதியிலிருந்து எடுத்து வந்ததாகத் தெரியவந்தது. 

இதையடுத்து, பீடி இலைகள் மற்றும் அதை எடுத்து வரப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1,000 கிலோ பீடி இலைகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் எனத் தெரிகிறது.


[X] Close

[X] Close