`எனக்குப் பிறகு தலைவராகக்கூடிய தகுதி கலி.பூங்குன்றனுக்கு உள்ளது!' - கி.வீரமணி பேச்சு | Kali.Poonkundran has ability to take a leader charge for dravidar kazhagam says ki.veeramani

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (23/02/2019)

கடைசி தொடர்பு:17:51 (23/02/2019)

`எனக்குப் பிறகு தலைவராகக்கூடிய தகுதி கலி.பூங்குன்றனுக்கு உள்ளது!' - கி.வீரமணி பேச்சு

`சமூகநீதி மாநாடு' என்ற பெயரில் திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு இன்று மற்றும் நாளை இரண்டு நாள்கள் தஞ்சையில் நடைபெறுகிறது. இன்றைய காலை அமர்வில் திராவிடர் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்ற, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உட்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் துவக்கமாக பெரியார், நாகம்மையார், மணியம்மையார் படத்திறப்பு நிகழ்வும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்கள் போன்றோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கி வீரமணி

'தனது ஆட்சியைப் பெரியாருக்கு காணிக்கையாக்குகிறேன் என்றார் அண்ணா. அதைத்தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றும், சமுத்துவபுர திட்டத்தையும் அமல்படுத்தினார் கருணாநிதி. ஆனால், தற்பொழுது சமூக நீதி கொள்கைக்கே அச்சுறுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டுள்ளது. அதற்கு ஆளும் மாநில அரசும் துணைபோகிறது. நேற்றுகூட, அமித் ஷா மதுரைக்கு வருகையில் ஓடிப்போய் துணை முதல்வர் நின்றார். 5 தொகுதிகள்தான் என்ற அதிருப்தி இருந்தாலும், மோடி ஆட்சி அமைய வேண்டும் என்றும், என்.டி.ஏ கூட்டணி என்றுதான் அழைக்க வேண்டும் என்று அமித் ஷா கட்டளையிட்டுள்ளார். 

வீரமணி

அதற்கு துணை முதல்வர் ஏதும் கூறாமல் தலையாட்டிவிட்டு வந்துள்ளார். மேலும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, தற்பொழுது அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைத்துள்ளது. இதன்மூலம் யார் உண்மையான திராவிடக் கட்சி என்று நிரூபணமாகியுள்ளது' என்றார் கி.வீரமணி. இதேபோல், ``எனக்குப் பிறகு திராவிட கழகத்தின் தலைவராக வரக்கூடிய தகுதி கலி.பூங்குன்றனுக்கு இருக்கிறது" எனக் கூறினார் வீரமணி. தொடர்ந்து பேசிய சுப.வீரபாண்டியன், 'திராவிட சுயமரியாதை கோட்பாட்டுக்கு இன்று நேரடி அச்சுறுத்தல் ஒருபுறம் என்றால், திராவிட எதிர்ப்பு பேசி சாதி அடிப்படையில் தேசியத்தை நிறுவுவது மற்றொருபுறமாக உள்ளது' என்றார். 

கலி.பூங்குன்றன்

சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்வோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் உடனடி பணி நியமனம், தமிழக மீனவ பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு மற்றும் ஈழத்தமிழர் உரிமை, மதுவிலக்கு, காவிரி உரிமை, கல்வியை மாநில பட்டியலுக்கு நிறுவுதல் மற்றும் 7 தமிழர்கள் விடுதலை உட்பட 24 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


[X] Close

[X] Close