நாடாளுமன்றத் தேர்தலைச் சீர்குலைக்க சதித் திட்டமா? - உடனடியாகக் கூடிய 4 மாநில டி.ஜி.பி-க்கள் கூட்டம் | 4 states DGP meeting held in ooty

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (23/02/2019)

கடைசி தொடர்பு:15:40 (23/02/2019)

நாடாளுமன்றத் தேர்தலைச் சீர்குலைக்க சதித் திட்டமா? - உடனடியாகக் கூடிய 4 மாநில டி.ஜி.பி-க்கள் கூட்டம்

மாவோயிஸ்ட்டுகள் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டுவதாக வந்த தகவலை அடுத்து நான்கு மாநில டி.ஜி.பி-க்கள் கூட்டம் ஊட்டியில் இன்று நடந்தது.

டி.ஜி.பி., கள் கூட்டம்

நீலகிரி மாவட்டம் கேரளா, கர்நாடக மாநில எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கேரளா தண்டர்போல்ட் அதிரடிப் படையினர் தினந்தோறும் வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனாலும் மாவோயிஸ்ட்டுகள் ஆதிவாசிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதேபோல் அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களையும்  விநியோகிக்கின்றனர்.

டிஜிபி-க்கள் கூட்டம்


தமிழக அதிரடிப் படையினரும் கேரளா எல்லையான நீலகிரி மாவட்டம்  மஞ்சூர், முள்ளி, கூடலூர், நாடுகாணி உள்ளிட்ட இடங்களில் தினந்தோறும் மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் தீவிரம்காட்டி வருகின்றனர். இந்த நிலையில், வரும் மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத் துறை போலீஸாருக்கு  ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.


இதைத் தொடர்ந்து, கேரளா, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் இன்று ஊட்டி தமிழக விருந்தினர் மாளிகையில் தொடங்கியது. டி.ஜி.பி-க்களின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி., சந்தீப் ரத்தோர், கேரளா டி.ஜி.பி., லோக்நாத் பெஹ்ரா, பாண்டிச்சேரி  டி.ஜி.பி., சுந்தரி நந்தா உள்ளிட்ட 28 ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து பொதுமக்களை எப்படிப் பாதுகாப்பது, அவர்களை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் எல்லைப் பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலை பிரச்னை இன்றி நடத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் ஊட்டி வருவதையொட்டி நீலகிரி எஸ்.பி.சண்முகபிரியா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close