`பா.ஜ.க பாரம்; பா.ம.க கூடுதல் பலவீனம்!’ - அ.தி.மு.க கூட்டணியை விமர்சித்த திருமாவளவன் | VCK chief Thirumavalavan criticizes AIADMK alliance

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (23/02/2019)

கடைசி தொடர்பு:19:50 (23/02/2019)

`பா.ஜ.க பாரம்; பா.ம.க கூடுதல் பலவீனம்!’ - அ.தி.மு.க கூட்டணியை விமர்சித்த திருமாவளவன்

‘‘அ.தி.மு.க கூட்டணிக்கு பாரமாக பா.ஜ.கவும், கூடுதல் பலவீனமாக பா.ம.கவும் இருக்கும்’’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்

வேலூரில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். பின்னர், நிருபர்களிடம் பேசிய அவர், ``நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து தி.மு.க தலைமை பேச்சுவார்த்தை குழுவுடன், பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். என்னென்ன தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்படும். எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை இரண்டொரு நாளில் தீர்மானிப்போம். அதன்பிறகு, அறிவிக்கிறோம். தே.மு.தி.க உட்பட மற்ற கட்சிகள், தி.மு.க கூட்டணியில் இணைவது பற்றி, ஸ்டாலின்தான் முடிவுசெய்வார். கூட்டணிக்கு முன்புவரை, அ.தி.மு.க-வும், பா.ம.கவும் மாறிமாறி எப்படி விமர்சித்துக்கொண்டார்கள் என்பதை நாடறியும். எதன் அடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்து நிற்கிறார்கள் என்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்படும். தி.மு.க தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெறும். இந்திய அளவில், பா.ஜ.க-வுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஏராளமான மாநில கட்சிகள், பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றிருப்பது, அந்தக் கூட்டணிக்கு தான் பாரம் . அதேபோல், பா.ம.கவைச் சேர்த்திருப்பது, அ.தி.மு.க-வுக்கு கூடுதல் பலவீனத்தை உண்டாக்கியிருக்கிறது’’ என்றார்.


[X] Close

[X] Close