முதுமலையை ஒட்டிய வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ! - தமிழக - கர்நாடக எல்லை மூடல் | Massive forest fire in TN - karnataka border

வெளியிடப்பட்ட நேரம்: 19:17 (23/02/2019)

கடைசி தொடர்பு:19:34 (23/02/2019)

முதுமலையை ஒட்டிய வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ! - தமிழக - கர்நாடக எல்லை மூடல்

நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கர்நாடக வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து அணைக்க முயன்ற வன ஊழியர் உடல் கருகி உயிரிழந்தார், 3 பேர் படுகாயமடைந்தனர்.

காட்டுத் தீ

தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டல்பேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, யானை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பந்திப்பூர் வனப்பகுதி மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா வரை பரந்து விரிந்து கிடக்கிறது. இந்நிலையில், எச்.டி.கோட்டை தாலுகா மூலயூரு பகுதியையொட்டி உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. வறட்சி காரணமாக வனப்பகுதியில் இருந்த மரங்கள், செடிகள், கொடிகள் காய்ந்து இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வன ஊழியர்கள் ராய்ச்சூரை சேர்ந்த முருகப்பா (வயது 35), மைசூருவை சேர்ந்த மனு, மஞ்சு, கங்காதர் ஆகியோர் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். தீ வேகமாக பரவியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

அப்போது திடீரென்று முருகப்பா புகை மண்டலத்தில் சிக்கிக் கொண்டார். அவரால் வெளியே வரமுடியவில்லை. அவர் மீதும் தீ பரவி எரிந்தது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். முருகப்பாவின் அலறல் சத்தத்தை கேட்ட கங்காதர், மனு, மஞ்சு ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனாலும், அதற்குள் முருகப்பா தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காப்பாற்ற முயன்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், சரகூரு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், அவர்கள் தீக்காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக எச்.டி.கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து பந்திப்பூர் வனப்பகுதிக்கு வந்த  தீயணைப்பு துறையினர் 10–க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம்  தீயை அணைக்க போராடி வருகிறார்கள். தற்போது வரை 50 ஏக்கரில் உள்ள மரங்கள், செடிகள், கொடிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

 

 

 

இதுகுறித்து சரகூரு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பந்திப்பூர் வனப்பகுதியில் பரவிவரும் தீயை அனைக்கும் பணியில் முதுமலை புலிகள் காப்பக பணியாளர்கள் 25 பேர் கர்நாடக வனத்துறையினருக்கு உதவி செய்து வருகின்றனர். முதுமலை ஒட்டிய பந்திப்பூர் வனத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருவதால்  பந்திப்பூர் - கூடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்ப்பாராத விதமாக இன்று மதியம் தமிழக வனப்பகுதிக்குட்பட்ட மசினகுடி செக்போஸ்ட் அருகில் மர்ம நபர்கள் நெருப்பு வைத்ததில் மசினகுடி வனப்பகுதியில் தீ பற்றி எரிகிறது. காட்டுக்குள் தீ பரவாமல் தடுக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close