அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகிலேயே 10,000 வாலா பட்டாசு! - சர்ச்சையில் அ.தி.மு.கவினர் | ADMK men burnt crackers near Coimbatore medical college hospital emergy wards

வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (23/02/2019)

கடைசி தொடர்பு:20:16 (23/02/2019)

அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகிலேயே 10,000 வாலா பட்டாசு! - சர்ச்சையில் அ.தி.மு.கவினர்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அகநாள் ஆய்வு கூடத்தின் திறப்பு விழாவுக்கு வந்த  அமைச்சர்களை வரவேற்பதற்காக  மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவின் அருகிலேயே அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்தது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது. 

அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகே பட்டாசு வெடித்த அ.தி.மு.கவினர்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் அகநாள ஆய்வு கூட்டம், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் ஆகியவற்றின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அமைச்சர்களை வரவேற்பதற்கு மருத்துவமனை முன்பு ஏராளமான அ.தி.மு.க-வினர்  கூடியிருந்தனர். உள்ளே நோயாளிகள் இருக்கிறார்கள் என்பதையும் பொருட்படுத்தாமல் மருத்துவமனை வளாகத்திற்குள் அமைச்சர்களை புகழ்ந்து பாடியபடி மேளம் அடித்துக் கொண்டிருந்தார் ஒரு அ.தி.மு.க தொண்டர்.

அதுவே நோயாளிகளையும் பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்தது. அதோடு நிறுத்தவில்லை அவர்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் மருத்துவமனையை நோக்கி வந்தபோது, வரவேற்பு என்கிற பெயரில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகில் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் 10,000 வாலா சரவெடியை வைத்து வெடிக்கச் செய்தனர் அ.தி.மு.கவினர். இதைப் பார்த்த அந்த வழியே சென்ற பொதுமக்களில் பலர் `இவங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா!’ என்று ஆத்திரமடைந்தார்கள். அதை படமெடுத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் நீங்களாச்சும் இதை என்னான்னு கேட்டக்கூடாதா என்று கோபத்தைக் கொட்டினார்கள் பலர்.

அவசர சிகிச்சைப் பிரிவு அ

​ஆனால், அவற்றையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாத  அ.தி.மு.க-வினர் அடுத்ததாக வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் காருக்கென தனியாக இன்னொரு 10,000 வாலா பட்டாசை வைத்துக் கொளுத்தினர். 

தீவிர சிகிச்சை பிரிவுக்கு அருகிலே இப்படி அ.தி.மு.கவினர் செய்த செயல், சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளைப் பெரும்  அவதிக்குள்ளாக்கியது. மருத்துவமனை அருகிலே வாகனங்கள் ஒலி எழுப்பக்கூடாது என்பது விதி. ஆனால், சுகாதாரத்துறை அமைச்சருக்காகவே அந்த விதியை வெடித்து தகர்த்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திறப்பு விழா முடிந்ததும் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பட்டாசு வெடித்தது குறித்து  பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர், ஆனால்  அமைச்சரோ பதில் கூற மறுத்து நழுவினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close