திருச்சியில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட தி.மு.க - அ.தி.மு.கவினர்! - எம்.பி மீது தாக்குதல் | Trichy MP assaulted by DMK cadres over bus stand dispute

வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (23/02/2019)

கடைசி தொடர்பு:20:22 (23/02/2019)

திருச்சியில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட தி.மு.க - அ.தி.மு.கவினர்! - எம்.பி மீது தாக்குதல்

திருச்சியில் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க மற்றும் தி.மு.கவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், திருச்சி எம்.பி குமார் மீது  தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
அ.தி.மு.க - தி.மு.க மோதல்
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே பணிமனையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். எனவே இந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்கச் சொல்லி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் குடியிருந்து வரும் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரரும், எம்.பியுமான பா.குமார் அப்பகுதியில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
 
பேருந்து நிலையம் அமைக்க இருந்த இடம் ரயில்வே துறைக்கு சொந்தமானது என்பதால் முறையாக அனுமதி பெறுவதற்காக எம்.பி குமார் தரப்பு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியில் தி.மு.க பகுதி செயலாளர் தர்மராஜின் அலுவலகம் உள்ளது. அப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் தங்களது இடத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அப்பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
 
 இன்று காலை எம்.பி குமார்  பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்கியது.  அதற்காக பேருந்து நிலையம் அமைப்பதற்காக, இடங்களைச் சமன் செய்வதற்காக பொக்லைன் எந்திரங்களை அனுப்பி வைத்தார். இதனைப் பார்த்த தி.மு.க பகுதிச் செயலாளர் தர்மராஜ், ரயில்வே துறைக்கு தகவல் கொடுத்து அனுமதியில்லாமல் பேருந்து நிலையம் அமைப்பதாக முறையிடவே விரைந்து வந்த மத்திய ரயில்வே படையினர் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
அ.தி.மு.க எம்.பி மீது தாக்குதல்
 
அந்த வழியாக தனது வீட்டிற்குச் சென்ற எம்பி.குமார் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை கவனிக்க தனது காரில் இருந்து இறங்கினார். அப்போது அங்கு பொக்லைன் இயந்திரங்களை காணவில்லை என்பதால் அதுகுறித்து விசாரித்திருக்கிறார். அப்போது, தி.மு.க தரப்புக்கும் குமார் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திருச்சி மாவட்ட மாணவர் அணி நிர்வாகி ஏர்போர்ட் விஜி மற்றும் எம்.பி குமார் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். தொடர்ந்து தாக்குதல் குறித்து தகவலறிந்த அ.தி.மு.க நிர்வாகிகள் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. 
 
அந்தப் பகுதிக்கு உருட்டுக்கட்டைகளுடன் வந்த அ.தி.மு.கவினர், தி.மு.க பகுதி செயலாளர் தர்மராஜன் அலுவலத்தை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகமானது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருச்சி மாநகர்  காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்தனர். விசாரணைக்குப் பின்னர் தர்மராஜன் மற்றும் பிரபா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
 
கடந்த பத்து வருடங்களாக எம்.பியாக இருக்கும் குமார் அப்பகுதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேருந்து நிலையம் அமைப்பதாக தி.மு.கவினர் குற்றம்சாட்டினார். மேலும், திருவெறும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் அப்பகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பேருந்து நிலையம் அமைக்க  இருந்ததாகவும் அதனை தெரிந்து கொண்ட அ.தி.மு.கவினர் குமார் மூலம் பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்ததுதான் பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள். அ.தி.மு.க எம்.பி மீது திருச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close