`காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மினிமம் பேலன்ஸ் அபராதம் ரிட்டன்' - ப.சிதம்பரம் வாக்குறுதி! | Congress P. Chidambaram participate in public meet at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (24/02/2019)

கடைசி தொடர்பு:10:42 (25/02/2019)

`காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மினிமம் பேலன்ஸ் அபராதம் ரிட்டன்' - ப.சிதம்பரம் வாக்குறுதி!

``மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் வங்கிக்கணக்கில் இருந்து வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்கிற பெயரில் அபராதமாகப் பிடித்தம் செய்யும் பணத்தை திரும்ப பொதுமக்களிடமே ஒப்படைப்போம்'' என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

ப.சிதம்பரம்

மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திருப்பூரில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பொதுக்கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், "தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு ஒரு ஊழல் அரசு என பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறி வந்தது. மேலும் அ.தி.மு.க அரசின்மீது புகார்கூறி கவர்னரிடம் 206 - பக்கங்களைக் கொண்ட ஊழல் பட்டியலையும் பா.ம.க கொடுத்துவிட்டு வந்தது. ஆனால் அதே கட்சி வரும் தேர்தலுக்காக அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. இதன்மூலம் அந்தக் கூட்டணி ஒரு ஊழல் கூட்டணி என்பது நமக்குத் தெளிவாகிறது. அ.தி.மு.க அரசின்மீது பா.ம.க அளித்த 206 பக்க ஊழல் பட்டியலை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சென்று நான் வாசித்துக் காட்டலாம் என முடிவெடுத்துள்ளேன். ஒருவகையில் அ.தி.மு.க - பா.ம.க தேர்தல் கூட்டணியைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் பா.ஜ.கவோடு போய் கூட்டணி வைத்திருப்பதைத்தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

சிதம்பரம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவேன் என மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் புள்ளி விபரங்களின் அடிப்படையில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும், நாட்டில் சுமார் 6.1 சதவிகிதம் அளவுக்கு வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்திருக்கிறது. பணமதிப்பு இழப்பு, ரபேல் ஒப்பந்தம் என தன்னிச்சையான சர்வாதிகார ஆட்சியை செய்துகொண்டு இருக்கிறார் மோடி. இந்த ஆட்சிக் காலத்தில்தான், பொதுமக்கள் தங்களின் வங்கிக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கவில்லை என்றால்கூட அபராதம் பிடித்துக்கொள்கிறார்கள்.

நான் உறுதியாகச் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்கிற பெயரில் அபராதமாகப் பிடித்தம் செய்யும் பணத்தை, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளிலேயே திரும்பவும் ஒப்படைப்போம். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி என்பது மதசார்பின்மை, மொழிப்பற்று, இட ஒதுக்கீடு என கொள்கை அளவில் ஒரே கருத்துடைய கூட்டணி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் மிகவும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 

மோடி என்றால் மோசடி என்று அர்த்தமாகிவிட்டது. நாட்டில் மீண்டும் சர்வாதிகார ஆட்சி அமைந்துவிடக் கூடாது. மகாத்மா காந்தி கனவு கண்ட இந்தியா, அம்பேத்கரால் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட இந்தியா, நேருவின் கற்பனை இந்தியா, வல்லபாய் படேல் ஒற்றுமைபடுத்திய இந்தியா என கடந்த 71 ஆண்டுகளாக நம் நாடு ஒரு யுகமாய் திகழ்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்த யுகம் இனியும் தொடரும். காங்கிரஸ் தோல்வியடைந்தால் இந்த யுகமே தோல்வியடையும்'' என்று பேசினார்.


[X] Close

[X] Close