`உன்னால் தான் நான் டிக் டாக்கில் அப்படி பேசினேன்!' - இளைஞனை கொலை செய்த பா.ம.க பிரமுகர் கைது | Youngster murder by his friend beause of Tik tok near thiruvallur

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (24/02/2019)

கடைசி தொடர்பு:10:00 (24/02/2019)

`உன்னால் தான் நான் டிக் டாக்கில் அப்படி பேசினேன்!' - இளைஞனை கொலை செய்த பா.ம.க பிரமுகர் கைது

 

டிக் டாக்

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நல்லாட்டூர் அருகே உள்ளது தாழவேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்டராமன். இவரது நண்பர் விஜய் இரண்டு தினங்களுக்கு முன்பு விஜய் தனது ஸ்மார்ட்போனில் வெங்கட்ராமனை  வீடியோ எடுத்தார். அந்த வீடியோவில்   வெங்கட்ராமன் பட்டியலின சமூகத்தைப் பற்றி அவதூறாகவும் அசிங்கமாக பேசி  டிக்டாக்கில் பதிவு செய்து வெளியிட்ட னர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரல் ஆனது. அந்த வீடியோ வெளிவந்ததைத் தொடர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் பா.ம.க பிரமுகர்வெங்கட்ராமன் பேசிய வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று  ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவலறிந்து வந்த திருத்தணி போலீசார் சம்பந்தப்பட்ட  இளைஞர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் சாலை போராட்டத்தை  கைவிடும்படி பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர்.  அதனைத் தொடர்ந்து அந்த மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். 

இந்நிலையில் இந்த இரண்டு பேரையும் போலீசார்  தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை விஜய் மற்றும் வெங்கட்ராமன் இருவரும் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சுந்தரம்மாள் கண்டிகை என்ற இடத்தில்  மது வாங்கி வந்து அந்த பகுதியில் உள்ள ஏரியில்  உட்கார்ந்து மது அருந்தினர். அப்போது விஜய்க்கும்  வெங்கட்ராமனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. உன்னால் தான் நான் அவ்வாறு பேசினேன் நீதான் என்னை அப்படி பேச வைத்தாய் என்று  வெங்கட்ராமன் விஜயை அடித்து  துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

கொலை செய்துவிட்டு பிறகு அங்கிருந்து தனது மோட்டார் பைக்கில் திருத்தணி காவல் நிலையம் வந்து நான் எனது நண்பர் விஜய் என்பவரை கொலை செய்துவிட்டேன். நான் தான் அந்த டிக் டாக் வீடியோவில் பேசிய வெங்கட்ராமன் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விஜயின் உடலை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து வந்தனர். அதன் பிறகு வெங்கட்ராமனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில்  இரு சமூகத்தினர் இடையே பெரிய சாதி மோதலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட வெங்கட்ராமன் மீது போலீசார் வீடியோ தொடர்பாக எந்த வழக்கும் எந்த  பதிவு செய்யாமல் கொலை வழக்கு மட்டும் பதிவு  செய்துள்ளனர் . இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் தமிழினியன் என்பவர் நீதிமன்றத்தில் போலீசார் மீது வழக்கு தொடுக்க இருப்பதாக தெரிவித்தார். போலீசார் வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலையை நடந்திருக்காது என்று தெரிவித்தார். மேலும் ஏற்கெனவே மப்பேடு வெங்கல் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு போலீஸாரின் மெத்தனப் போக்கே காரணம் என்று குற்றம் சாட்டினார்.


[X] Close

[X] Close