கடலூர் அருகே ஆசிரியையைக் கொலை செய்த வாலிபர் தற்கொலை - போலீஸார் விசாரணை | cuddalore kurinchipadi teacher murder accused suicide

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (24/02/2019)

கடைசி தொடர்பு:08:42 (25/02/2019)

கடலூர் அருகே ஆசிரியையைக் கொலை செய்த வாலிபர் தற்கொலை - போலீஸார் விசாரணை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்ன கடை வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ரம்யா(23). இவர் கடந்த வருடம் கடலூரில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்துள்ளார். அப்பொழுது  விருத்தாசலம் அருகே உள்ள விருத்தகிரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர்(24) என்பவரும் கடலூரில் உள்ள அரசு  கலைக் கல்லூரியில் படித்துள்ளார். இருவரும் கல்லூரிக்கு செல்லும் போது பேருந்தில் அடிக்கடி சந்தித்துள்ளனர்.  இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அப்பொழுது ராஜசேகர், ரம்யாவை காதலிப்பதாகக் கூறியுள்ளார்.  அதற்கு ரம்யா மறுத்துள்ளார். ஆனாலும் ராஜசேகர் விடாமல் பல முறை ரம்யாவிடம் தொடர்ந்து காதலிப்பதாக  கூறியுள்ளார். ராஜசேகரின் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ரம்யா, நான் காதலிக்க மாட்டேன்,  நீ வேண்டுமானால் எங்கள் வீட்டில் வந்து பேசிக்கொள் எனக் கூறியுள்ளார்.

ரம்யா

இதனையடுத்து கடந்த 6 மாதம் முன்பு  ரம்யா வீட்டிற்கு வந்த ராஜசேகர் பெண் கேட்டுள்ளார். அதற்கு ரம்யாவின் பெற்றோர் முடியாது எனக் கூறி மறுத்துள்ளனர். அதன் பிறகு ரம்யாவும், ராஜசேகரை புறக்கணித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் கடந்த 22-ம் தேதி குறிஞ்சிப்பாடியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்த ஆசிரியை ரம்யாவை கத்தியால் குத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ராஜசேகரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கொலை செய்த அன்று மதியம் ராஜசேகரின் சகோதரி ஆனந்திக்கு  செல்போனுக்கு அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறிவிட்டு  செல்போனை சுவிட்ஜ் ஆப் செய்துள்ளார். ராஜசேகரில் செல்போன் டவர் சிக்னலை வைத்து போலீஸார் அவரைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று காலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையாங்குளம் கிராமத்தில் உள்ள முந்திரிக் காட்டில் ஒரு மோட்டார் சைக்கிள் தனியாக நிற்பதாக திருநாவலூர் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடன் சம்பவ இடத்துக்குச் சென்ற திருநாவலூர் போலீஸார் அங்கு மோட்டார் சைக்கிள் நின்ற இடத்துக்கு அருகில் முந்திரி மரத்தில் ஒரு வாலிபர் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார்.

ராஜசேகர்


தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளி ஆசிரியை ரம்யாவை கொலை செய்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விவசாரணை நடந்து வருகிறது. 


[X] Close

[X] Close