‘அங்கு கொள்கையும் இல்லை; பாதுகாப்பும் இல்லை’ - தி.மு.கவில் இணைந்த பா.ம.க-வினர் | PMK Followers joined DMK Party

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/02/2019)

கடைசி தொடர்பு:20:00 (24/02/2019)

‘அங்கு கொள்கையும் இல்லை; பாதுகாப்பும் இல்லை’ - தி.மு.கவில் இணைந்த பா.ம.க-வினர்

விலகி

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி உறுதியாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் விருந்தளித்தார். அதிமுகவுடனான கூட்டணியால் பா.ம.க நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 500 பேர் பா.ம.கவை விட்டு விலகி சேலம் மத்திய மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்கள். இதற்கான இணைவு விழா சேலம் கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் லியாகத் அலி, ஓமலூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ராம்பிரகாஷ், ஒன்றிய துணைச் செயலாளர் வளர்மதி கிளைச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் சுமார் 500 விலகினார்கள். பிறகு தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் தலைமையில் ஓமலூர் ஒன்றிய கிளைகளில் தி.மு.க கொடிகள் ஏற்றினார்கள்.

இந்த இணைவு விழாவில் பேசிய சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ''பா.ம.க தலைவர் ராமதாஸூம், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணியும் கட்சியை அடமானம் வைத்து அ.தி.மு.கவில் இணைந்திருக்கிறார்கள். அது பாரதிய ஜனதா கட்சியோடு பேரம் பேசி கூட்டணி அமைத்தது போல இருக்கிறது. பா.ம.க கட்சியை விலைபேசி விற்றிருக்கிறார்கள். அதனால் அக்கட்சியை விட்டு விலகி விவசாயிகளுக்கு மின்சாரமும், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடும் பெற்றுக் கொடுத்த தி.மு.கவோடு இணைந்திருக்கிறார்கள்'' என்றார்.

லியாகத் அலி

பா.ம.கவில் இருந்து விலகிய லியாகத் அலி, ''நான் 20 வருடமாகப் பா.ம.கவில் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தேன். அங்குக் கொள்கை இல்லை, பிடிப்பு இல்லை, பாதுகாப்பு இல்லை. அவர்கள் அடிக்கடி கொள்கையை மாற்றியதால் நான் கட்சியில் இருந்து மாறி தி.மு.கவிற்கு வந்து விட்டேன்'' என்றார்.

ராம்

ஓமலூர் ஒன்றிய இளைஞரணி பதவியை துறந்து வந்த ராம் பிரகாஷ், ''பா.ம.க தலைவர் ராமதாஸ் இனி நாம் திராவிட கட்சிகளோடும் கூட்டணி இல்லை. நீங்கள் தைரியமாக பா.ம.கவிற்கு ஓட்டுக் கேளுங்கள் என்றார். அதையடுத்து நாங்கள் மக்களிடம் பா.ம.கவிற்கு ஓட்டுக் கேட்டோம். ஆனால் யாரிடமும் சொல்லாமல் அ.தி.மு.கவோடு கூட்டணி சேர்ந்து கொண்டார். நாங்கள் எப்படிப் போய் ஓட்டு கேட்க முடியும். அவர் எப்படியும் மாறி மாறி திராவிட கட்சிகளோடு தான் கூட்டணி வைக்கிறார். அதனால் நாங்களும் தி.மு.க கட்சியில் இணைந்து கொண்டோம்'' என்றார்.


[X] Close

[X] Close