புதுப்பொலிவு பெற்றது எம்.ஜி.ஆரின் கேரளா வீடு! - 26-ம் தேதி திறப்பு விழா | Mgr home at Kerala will open on tuesday

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (24/02/2019)

கடைசி தொடர்பு:08:47 (25/02/2019)

புதுப்பொலிவு பெற்றது எம்.ஜி.ஆரின் கேரளா வீடு! - 26-ம் தேதி திறப்பு விழா

எம்.ஜி.ஆர்

``கேரளாவில் சிதிலமடைந்த நிலையில் இருந்த எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு புனரமைக்கப்பட்டு வருகின்ற 26-ம் தேதி கேரளா மாநில கவர்னர் சதாசிவம் திறந்துவைக்க இருப்பதாக சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்."

இன்று கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த  சைதை துரைசாமி, ``கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு பழுதடைந்து முட்புதர்கள் மண்டிக்கிடப்பதாகவும், அதை யாரும்  சீரமைக்க முன்வரவில்லை என்றும் ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கவலையுற்றோம். உடனடியாக எம்.ஜி.ஆர் வாழ்ந்த அந்த வீட்டை எங்களது மனிதநேய ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா கல்வி மையம் சார்பாக புனரமைக்க ஏற்பாடு செய்தோம். தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. வருகின்ற 26-ம் தேதி, கேரளா மாநில கவர்னர் சதாசிவம் அவர்களால் எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு திறந்து வைக்கப்பட இருக்கிறது.

சைதை துரை சாமி

எம்.ஜி.ஆரின் சாதனைகள் மற்றும் அவரது வாழ்க்கை வரலாறுகள் அடங்கிய ஒலிநாடாக்கள் அந்த வீட்டில் தினமும் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளோம். கூடவே எம்.ஜி.ஆருக்கு அங்கு கற்சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது வரை சுமார் 1 கோடி ரூபாய் செலவாகியுள்ளது" என்றவரிடம் தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லையா?  என பத்திரிகையாளர்கள்  எழுப்பிய கேள்விக்கு, ``இதுதொடர்பாக தமிழக முதல்வரைச் சந்திக்க இருக்கிறேன். சந்தித்ததற்குப் பிறகுதான் யார் கலந்துகொள்வார்கள் என்று தெரியும். தற்போது நான் மக்கள் பணியோடு நின்றுவிட்டேன். ஆகையால், நான் அரசியல் பேச விரும்பவில்லை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close