முதுமலையில் 18 ஹெக்டேர் வனத்தை நாசமாக்கிய தீ - குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சன்மானம் அறிவித்த வனத்துறை! | fire in mudhumalai tiger reserve Forest

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (24/02/2019)

கடைசி தொடர்பு:10:02 (25/02/2019)

முதுமலையில் 18 ஹெக்டேர் வனத்தை நாசமாக்கிய தீ - குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சன்மானம் அறிவித்த வனத்துறை!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள மசினகுடி வனச் சரகத்தில் மர்ம நபர்கள் பற்ற வைத்த தீ, சுமார் 18 ஹெக்டேர் வனப்பகுதியை நாசமாக்கியது. தாெடர்ந்து வனத்துறையினர் தீயை அணைக்கப் போராடி வரும் நிலையில், தீ விபத்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுமலை தீ விபத்து

நீலகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி - தெப்பக்காடு சாலையோரத்தில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மள மளவென அடுத்தடுத்த வனப்பகுதிகளுக்குப் பரவிய தீ கொழுந்துவிட்டு எரியத் தாெடங்கியது. தகவல் அறிந்த மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று காட்டுத்தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், பலத்த காற்று வீசியதால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள், தற்காலிக தீத்தடுப்பு பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு குழுக்களாக பிரிந்து காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், தீயின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால், கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். இதற்கிடையில் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைப்பு பணி நடந்தது. ஆனால், அதுவும் ஓரளவே கை கொடுத்தது. மண்டியார் வனப்பகுதியிலும் கொழுந்துவிட்டு எரிந்த தீ, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் பின்புறமுள்ள வனப்பகுதிக்கும் பரவியது. இரண்டாம் நாளாக தாெடர்ந்து எரியும் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் பாேராடி வருகின்றனர். 

முதுமலை தீ விபத்து

இந்தப் பயங்கர காட்டுத்தீயில் மரம், செடி, கொடி, புற்கள் என சுமார் 18 ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. மேலும், ஏராளமான சிறு உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதுமலையை ஒட்டியுள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியிலும் காட்டுத்தீ பற்றி எரிவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கூடுதல் வனக் காப்பாளர் புஷ்பாகரன் கூறுகையில், ``முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச் சரகத்துக்குட்பட்ட 5 இடங்களில் மர்ம நபர்கள் பற்ற வைத்த தீயை, வனத்துறையினர் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர்.

தீ விபத்து

தீ பற்ற வைத்தவர்களைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்து குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தீ பரவி வருவதால், இன்று முதல் இரண்டு நாள்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது. அதேபாேல சுற்றுலாப் பயணிகளுக்கான வாகன சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தீ கட்டுப்படுத்தப்பட்டவுடன், முதுமலை புலிகள் காப்பகம் வழக்கம்பாேல செயல்பாட்டுக்கு வரும், எதிர்வரும் காலங்களில் இதுபாேன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close