`நான் வார்டு கவுன்சிலராக கூட ஆக முடியாது' -  சுப.வீரபாண்டியன் பேச்சு! | suba veerapandian talks about politics

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (25/02/2019)

கடைசி தொடர்பு:07:01 (25/02/2019)

`நான் வார்டு கவுன்சிலராக கூட ஆக முடியாது' -  சுப.வீரபாண்டியன் பேச்சு!

மதுரை அரசரடி இறையியல் கல்லூரியில் `திராவிடத் தனையர்கள்' அமைப்பு நடத்திய பயிலரங்கு ஒன்றில் சுப.வீரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மாணவர்கள், இளைஞர்களின் உரைகளையும் நாடகத்தையும் கண்டுகளித்த அவர் நிறைவாகச் சிறப்புரையாற்றினார்.

சுப வீரபாண்டியன்

அவர் கூறியதாவது, ``இளையவர்கள் இலக்கியங்களை மறுவாசிப்பு செய்ய வேண்டும். திராவிடர் கழகம், கொள்கைசார் கட்சி. இதன் கூட்டச் செலவுக்கு ரூ.15,000 போதும். தி.மு.க, வெகுமக்கள் கட்சி, அதன் கூட்டத்துக்கு ரூ.15 லட்சம் செலவு ஆகும். இயக்கமாக மட்டும் இருந்தால், எதிராளிகள் அழித்துவிடுவார்கள். தி.மு.கவுக்கு ஆட்சிக்கு வரும் ஆற்றல் உண்டு, ஆதரிப்பதே நம் பணி. மக்கள் தெளிவாக உள்ளனர், ஆனால், சில மயக்கங்கள் அவர்களைப் பிடித்து ஆட்டுகின்றன. மக்கள் வெட்கப்படாமல் லஞ்சம் வாங்குவது அருவருப்பாக உள்ளது" என்றார். மேலும் அவர் கூறுகையில், ``2001-ம் ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த வடமாநில மக்கள் 58.20 லட்சம் பேர். அதே எண்ணிக்கை, 2011-ல் 77.50 லட்சமாக உயர்ந்தது. இங்கே நான்கில் ஒரு பங்கு மக்கள், வடமாநிலத்தவர் எனில் இது, தற்செயலானது அல்ல. தாமரை மலரும் எனத் தமிழிசை கூறுவதற்கான அர்த்தம் அவருக்குத் தெரியாது. ஆனால், ஹெச்.ராஜா போன்றோருக்குத் தெரியும். திராவிடம், பார்ப்பனீயம் இரண்டையும் எதிர்ப்பவர்களே மிகவும் ஆபத்தானவர்கள். நான் உறுப்பினர் அட்டை வாங்காத தி.மு.ககாரன்" என்றார்.

கூட்டணி குறித்துப் பேசுகையில், ``திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியில்லை எனத் திட்டவட்டமாகச் சொன்ன பா.ம.க, அ.தி.மு.க-வுடன் கூட்டு அமைத்துள்ளது. இதன்மூலம் அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை என்பதை அவர்கள் குறிப்பால் உணர்த்துகின்றனர். அங்கே சாதியும் மதமும் பதவியும் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால், இங்கே திராவிடம், சிறுபான்மை நலம், பெண்ணியம், தலித்தியம் எல்லாம் கூட்டணி" என்றார். தேர்தலில் போட்டியிடுவது பற்றிப் பேசியவர், ``கலைஞரிடம் ஒருமுறை, `நீங்கள் போட்டியிட்டு பிரதமர் ஆகலாமே?' என்றதற்கு, `என் உயரம் எனக்குத் தெரியும்' என்றாராம். என் பதிலும் அதுதான். நான் முதல்வராக அல்ல, வார்டு கவுன்சிலராக கூட ஆக முடியாது எனத் தெரியும். மக்கள் தலைவரான ஸ்டாலின்தான் முதல்வர் பதவிக்குத் தகுதியுடையவர்" என்றார். தொடர்ந்து கேள்விகளுக்குப் பதிலளித்தவர் கறுப்புச்சட்டை குறித்த ஒரு கேள்விக்கு, ``வண்ணங்கள் நாம் பொருள் கொண்டு புரிந்துகொள்கிறோம். கறுப்பு, துக்கமல்ல. கறுப்பு ஆடை அணிந்த வழக்கறிஞர்கள், நீதிக்காகப் போராடுகின்றனர். நாங்கள் சமூக நீதிக்காகப் போராடுகிறோம்" எனப் பதிலளித்தார்.


[X] Close

[X] Close