`பதவி மக்கள் கொடுத்தது; அவர்களுக்காக அதை இழக்கத் தயார்' - கருணாஸ் எம்.எல்.ஏ! | The promotion was given to the people! I am ready to lose anything for the people - Karunas MLA

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (25/02/2019)

கடைசி தொடர்பு:08:30 (25/02/2019)

`பதவி மக்கள் கொடுத்தது; அவர்களுக்காக அதை இழக்கத் தயார்' - கருணாஸ் எம்.எல்.ஏ!

எம்.எல்.ஏ பதவி மக்கள் கொடுத்தது. மக்களுக்காக எதையும் இழக்க நான் தயார். விருப்பம் இருந்தால், மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் செல்வாக்குடன் வாக்குகளைப் பெற்று மீண்டும் எம்.எல்.ஏவாக வருவேன்" என கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

கருணாஸ்

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``வரும் 27-ம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்து முடிவு எடுக்கும். ஏற்கெனவே நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறேன். அதில், ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல் குறித்து கலந்தாலோசனை செய்து அதன் பிறகு ஒரு முடிவு எடுப்போம். பதவி மக்கள் கொடுத்தது. மக்களுக்காக எதையும் இழக்க நான் தயார். விருப்பம் இருந்தால் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளைப் பெற்று மீண்டும் எம்.எல்.ஏவாக வருவேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்துள்ளதால்,  அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பெரும்பாலான ஓட்டுகளைப் பிரிப்பார். அது அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக அமையும். அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவு தி.மு.க-வுக்குத் தான் சாதகமாக இருக்கும். கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறி வந்த பா.ஜ.க அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. தேர்தலில் அவர்கள் தனித்து  நிற்க வேண்டியது தானே.

இதேபோல், கடந்த மாதம் வரையிலும் பா.ம.க தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக சுமத்தி வந்தது. இதுகுறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளது. ஆனால், தற்போது ஆதரவு அளிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. பா.ம.க-வின் ஏமாற்று அரசியல் மக்களிடம் எடுபடாது. மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்பதில் மத்திய மாநில அரசுகள் அரசியல் செய்கிறது. விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை உடனடியாக வைக்காவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயம் மத்திய மாநில அரசுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள். அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் தினகரனின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், அரசியல் கட்சியினர் பலரும் அவரை அழிக்க நினைக்கின்றனர். ஆனால், சத்தமில்லாமல் அவரது செல்வாக்கு வளர்ந்து வருகிறது. நாடாளுமன்றத் தொகுதி கூட்டணிக்குத் தினகரன் அழைத்தாலே செல்லத் தயாராக உள்ளேன். இருப்பினும் 27-ம் தேதி கூட்டத்துக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்" என்றார்.


[X] Close

[X] Close