`4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நடவு செய்தோம்' - கருகும் நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை! | Cuddalore farmers worried about Water scarcity Problem

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (25/02/2019)

கடைசி தொடர்பு:09:50 (25/02/2019)

`4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நடவு செய்தோம்' - கருகும் நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை!

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே போதிய தண்ணீர் இல்லாததால் சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் காய்ந்து கருகும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். 

வீராணம் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக வெள்ளாறு ராஜன் வாய்க்காலுக்குச் சென்று அதன் கிளை வாய்க்காலாக உள்ள மானம் பார்த்தான் வாய்க்கால் வழியாக புதுச்சத்திரம் பகுதி பாசனத்துக்குத் தண்ணி அனுப்பி வைக்கப்படும். இதன்  மூலம் புதுச்சத்திரம் அருகேயுள்ள அத்தியாநல்லூர், கொத்தட்டை, சேந்திரகிள்ளை,  பால்வாத்துண்ணான், மணிகொல்லை, வேளங்கிப்பட்டு, வில்லியநல்லுர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. 

 புதுச்சத்திரம்

மானம் பார்த்தான் வாய்க்கால் 25 கிலோமீட்டர் தூரம் கடந்து கழுத்தை வெட்டி வாய்க்காலாகப் பெயர் மாற்றம் அடைந்துள்ளது. இப்பகுதி விவசாயிகள் வாய்க்காலில் இருந்த தண்ணீரைக் கொண்டு நெற்பயிர் நடவு செய்திருந்தனர். தற்போது நடவு செய்து பயிர்கள் நன்கு வளரும் நேரத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிர் காய்ந்து கருகி வருகிறது. மேலும், நிலங்கள் தண்ணீரின்றி வெடித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து மனவேதனையில் உள்ளனர்.

இந்த நிலையில், பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கற்பனைச் செல்வம் தலைமையில், கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். மனுவைப் பெற்ற அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் அனுமதிபெற்று தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர். 

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் கற்பனைச்செல்வம் கூறியதாவது, ``இந்தப் பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். அதுவும் தற்போது சரியான தண்ணீர் இல்லாததால் கருகும் நிலையில் உள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.


[X] Close

[X] Close