``இப்பவாவது உங்க வாக்கு உண்மையாகுமா?"- எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் மக்கள் கேள்வி | "Is this your vote really true?" - People question against minister!re

வெளியிடப்பட்ட நேரம்: 10:37 (25/02/2019)

கடைசி தொடர்பு:11:39 (25/02/2019)

``இப்பவாவது உங்க வாக்கு உண்மையாகுமா?"- எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் மக்கள் கேள்வி

கரூரில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், `விரைவில் கரூருக்கு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது' என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில், ``இது அமைச்சர் பதினோறாவது முறையாக கொடுக்கும் வாக்குறுதி. இந்தத் தடவையாவது அமைச்சரின் வாக்கு உண்மையாகுமா" என்று கரூர் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

எம் ஆர் விஜயபாஸ்கர்

அ.தி.மு.க சார்பில் கரூர் தான்தோன்றிமலைப் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில்,  ``நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் வலுவான கூட்டணி அமைக்கப்படும். சிலிப்பர் செல்கள் என்று யாரும் இல்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும். ஏழை, எளிய மக்களின் நில அபகரிப்பை மேற்கொண்ட தி.மு.கதான் மைனாரிட்டி அரசாக இருந்தது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் நினைக்கும் மனக்கணக்கு நடக்காது. ஊழலைப் பற்றி பேச தி.மு.க-வுக்கு என்ன தகுதி இருக்கிறது. ராசா, கனிமொழி சிறையில் இருந்தார்கள். மாறன் சகோதரர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தி.மு.க ஊராட்சி சபை கூட்டத்தில் பேசும் மக்களுக்கு எழுதி கொடுக்கப்படுகிறது.

22 கோடி மதிப்பில் கரூர் ரயில்வே ஜங்ஷன் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை அம்மா சாலை திட்டம் மூலம் கரூர் நகரின் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படவுள்ளது. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை முயற்சியில் 3,500 கோடி திட்டமதிப்பீட்டில் பசுமை வழி திட்டத்தை மத்திய அரசின் உதவியுடன் திருச்சி முதல் கரூர் வழியாக கோவை வரை அமைக்கப்பட்டவுள்ளது. கரூரில் 300 கோடி மதிப்பீட்டில் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டுவரப்பட்டு, நடப்பாண்டில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. விரைவில் கரூருக்கு புறநகர் பேருந்துநிலையம் அமைக்கப்படவுள்ளது" என்று பேசினார்.

இந்த நிலையில், நம்மிடம் பேசிய கரூர்வாசிகள் சிலர், ``தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கிறது கரூர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்- 7 கரூர் வழியாகதான் போகிறது. திருச்சி முதல் கோவை மற்றும் ஈரோடு வரையிலான சாலைகளும் கரூர்` வழியாகதான் போகின்றன. கரூர் தொழில் நகரங்களில் ஒன்று. ஆனால், கரூருக்கு புறநகர் பேருந்து நிலையம் இல்லை. கரூர் நகரத்துக்குள் இருக்கும் பேருந்துநிலையத்தால்,போக்குவரத்து நெரிசலில் தினம் மக்கள் அல்லல்படுகிறார்கள். 'புறநகர் பேருந்து நிலையம் ஒன்று அமையுங்கள்' என்று நங்களும் பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது, புறநகர் பேருந்துநிலையம் அமைக்க முயற்சி செய்தார்.

ஆனால், தம்பிதுரையும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், `செந்தில்பாலாஜிக்கு வேண்டியவர் நிலமதிப்பு உயர்வதற்காக பேருந்துநிலையம் அமைக்கப் பார்க்கிறார்' என்று சொல்லி தடுத்துட்டாங்க. தம்பிதுரையும், கரூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், `இதோ பேருந்து நிலையம் அமைத்துவிடுகிறோம்' என்று பத்துக்கும் மேற்பட்ட தடவை வாக்குறுதி கொடுத்தாங்க. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தப்ப, அடிக்கல்கூட நாட்ட வச்சாங்க. ஆனாலும், அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் சின்னச் சின்ன நகரத்தில் எல்லாம் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. ஆனா, போக்குவரத்துத்துறை அமைச்சர் தொகுதியில் அது தொங்கலில் நிக்குது. இந்த முறையும் அறிவிப்பு வரலைன்னா, வீதியில் இறங்கிப் போராடுவோம்" என்றார்கள்.


[X] Close

[X] Close