`அன்று சவுக்கால் அடியுங்கள் என்றார்; இன்று ராமதாஸை என்ன செய்யலாம்?'- முத்தரசன் காட்டம் | mutharasan slams Modi, edappadi and Ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (25/02/2019)

கடைசி தொடர்பு:12:10 (25/02/2019)

`அன்று சவுக்கால் அடியுங்கள் என்றார்; இன்று ராமதாஸை என்ன செய்யலாம்?'- முத்தரசன் காட்டம்

``நானோ, என் குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிட மாட்டோம். அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றார். இப்பொழுது அவரை என்ன செய்யலாம்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்து பேசினார். 

முத்தரசன்

தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு நாள்கள் திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட தி.மு.க-வின் கூட்டணி கட்சித் தலைவர்கள், பா.ஜ.க, அ.தி.மு.க-வைவிட பா.ம.க-வை தான் அதிகமாக வசைப்பாடினார்கள். குறிப்பாக ராமதாஸை, இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வார்த்தைகளில் பேசினார்கள். வழக்கமாக தேர்தல் நேரத்தில் ஒரு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினர், மற்றொரு கூட்டணிக்கு தலைமையேற்கும் கட்சியையோ அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள கட்சியையோதான் அதிகமாக விமர்சிப்பார்கள். ஆனால், தற்பொழுது பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க கடுமையாக வசைப்பாடப்படுகிறது.

இம்மாநாட்டுக்கு சமூக நீதி மாநாடு என திராவிடர் கழகம் பெயர் சூட்டியிருந்தாலும், இது தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாகவே நடைபெற்றது. திராவிட கழக தொண்டர்கள் மட்டுமில்லாமல், தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் அதிகளவில் கலந்துகொண்டார்கள். இதில் உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ``அ.தி.மு.க-வுக்கு எந்த ஒரு கொள்கையும் கிடையாது என அனைவரும் சொல்கிறார்கள். அது உண்மையல்ல. அவர்களுக்கென்று ஓர் கொள்கை உண்டு. தினமும் பெட்டியாக பணம் வாங்கி குவிக்க வேண்டும் என்பதுதான் அக்கட்சியினரின் கொள்கை. இதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள். இதனால்தான் மதவெறி கட்சியான பா.ஜ.க-வோடு கூட்டணி சேர்ந்துள்ளார்கள். இவர்களோடு பா.ம.க-வும் கூட்டு சேர்ந்துள்ளது. நானோ, என் குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிட மாட்டோம். அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றார். இப்பொழுது அவரை என்ன செய்யலாம். அ.தி.மு.க-வுடன் கூட்டு சேர்வது தாயோடு உறவு கொள்வதற்கு சமம் என்றும் ராமதாஸ் சொன்னார். தற்பொழுது அ.தி.மு.க-வுடன் கூட்டு சேர்ந்துள்ளார்” என பேசினார்.

ஜவாஹிருல்லா

இவருக்கு முன்னதாக பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவும் ராமதாஸை கடுமையாக வெளுந்து வாங்கினார். ``சமூகநீதியை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க-வோடு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது. சமூக நீதி பற்றி வாய்கிழியப் பேசிவந்த ராமதாஸ், மானங்கெட்டுப் போய் பா.ஜ.க-வோடு கூட்டணி சேர்ந்துள்ளார். அது ஒரு மானங்கெட்ட கூட்டணி” என இன்னும் பல கடுமையான வார்த்தைகளில் திட்டித் தீர்த்தார். 


[X] Close

[X] Close