`வந்தால் ஹேப்பி; வராவிட்டால் டோன்ட் வொரி’ - தே.மு.தி.க கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் | Minister jayakumar press meet regarding election alliance

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (25/02/2019)

கடைசி தொடர்பு:12:45 (25/02/2019)

`வந்தால் ஹேப்பி; வராவிட்டால் டோன்ட் வொரி’ - தே.மு.தி.க கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தே.மு.தி.கவுடன் நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்திருக்கிறார்.  

அமைச்சர் ஜெயக்குமார்

நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் கூட்டணி அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இன்னும் கூட்டணி நிலைப்பாட்டினை அறிவிக்காத கட்சிகளும் உள்ளனர். அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க இணையும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்து வருகிறது. 

இந்நிலையில் இன்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கைகள் வேறு வேறாக இருக்கும். எங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அதேபோன்று பா.ஜ.க-வுக்கும் கொள்கை இருக்கிறது. தி.மு.க-வுக்கும் தனியாக கொள்கைகள் இருக்கிறது. ஆனால், தி.மு.க அதைக் கடைபிடித்தார்களா என்று பார்க்க வேண்டும். 

ஸ்டாலின்

மாநில சுயாட்சி என்று கூறிக்கொண்டு எத்தனையோ மாநில உரிமைகளைத் தாரை வார்த்தார்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்தான் மாநில உரிமைகளை மீட்டுக்கொண்டு வந்தனர்.  பா.ஜ.கவால் அதிகம் பயனடைந்தவர்கள் என்றால் அது தி.மு.கதான். பொருளாதார ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி, பா.ஜ.க-வால் அதிகம் பலனடைந்தது தி.மு.கதான். முந்தைய காலங்களில் பா.ஜ.க-வின் பெயரைத் தாங்கி, பா.ஜ.க-வுக்கு வால் பிடித்து வளர்ந்தவர்கள் தி.மு.கவினர். இன்று இதையெல்லாம் மறந்துவிட்டுப் பேசக் கூடாது. கருத்து சொல்பவர்களை யார் என்று பார்க்க வேண்டும். தமிழக மக்கள் விழிப்புஉணர்வு கொண்டவர்கள்”என்றார். 

தினகரன்

பின்னர் செய்தியாளர்கள் அ.தி.மு.க கூட்டணியை தினகரன் விமர்சித்தது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ``சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்தின் அடையாளம் ஆகியவை முதலில் பொருந்துவது தி.மு.க மற்றும் அதன் தலைவருக்குத்தான். இந்த இரண்டும் இரண்டாவது பொருந்துவது தினகரனுக்குத்தான். தமிழகத்தைக் கொள்ளையடித்த கும்பல் அவர்கள். கார்டன் பக்கமே வரக்கூடாது என அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்கள், கடந்த பத்தாண்டுக் காலம் எங்கு இருந்தார்கள் என்றே தெரியவில்லை. அவர்களின் பித்தலாட்டத்தைத் தெரிந்துதான் அம்மா ஒதுக்கி வைத்தார்கள். தன் மீது குற்றத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை விமர்சிப்பது சரியில்லை. பெருகிவரும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியின் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தீய சக்திதான் தினகரன்” என்றார். 

தேமுதிக

பின்னர் தே.மு.தி.க-வுடனான கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``அ.தி.மு.கவில் தேர்தலுக்கான கூட்டணிக் கதவுகள் திறந்து இருக்கிறது. அந்த வகையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. தே.மு.தி.க எங்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டாலும் கவலையில்லை’ என்றார்.


[X] Close

[X] Close