வன்முறைக்குக் காரணம் கருணாஸ்!- டி.ஜி.பியிடம் 'நண்டு' பெண் புகார் | police complaint against MLA Karunas

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (25/02/2019)

கடைசி தொடர்பு:15:35 (25/02/2019)

வன்முறைக்குக் காரணம் கருணாஸ்!- டி.ஜி.பியிடம் 'நண்டு' பெண் புகார்

கருணாஸ் மீது நர்மதா புகார்

மதுரையில் நடந்த வன்முறை சம்பவத்துக்குக் காரணமான எம்.எல்.ஏ. கருணாஸ் உட்பட 3 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பியிடம் அமைச்சர் வீட்டில் நண்டுவிடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். 

சென்னை அண்ணாநகர் மேற்கு திருவல்லீஸ்வரர்நகர் மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நர்மதா நந்தகுமார். இவர், போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான், கடந்த 20.2.2019ல் மதுரைக்குச் சென்றிருந்தேன். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்த நீதிபதிக்கு வைக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தேன். பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றேன். அப்போது பஸ்கள் சரியாக ஓடவில்லை. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.  அதற்கு அந்தப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியே காரணம் என்று தெரியவந்தது. அந்த நிகழ்ச்சிக்கு கருணாஸ் எம்.எல்.ஏ  உட்பட முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். 

 கருணாஸ்

இதையடுத்து, வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை சிலர் வழிமறித்ததாகத் தகவல் கிடைத்தது. 90 சதவிகித கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுரையில் நடந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ், தொகுதிக்கு என்ன நல்லது செய்திருக்கிறார். பூஜ்ஜியம்தான். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டி.ஜி.பி-யிடம்  எத்தனை முறை புகார் கொடுத்தாலும் அவரிடமிருந்து எனக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. ஒரு சம்பிராயத்துக்காக புகார் கொடுத்துள்ளேன்" என்று குறிபிடப்பட்டுள்ளது. 

அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டத்தில்  நர்மதா ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்கி மணல் கொள்ளைவரை தனியொருவராக  அவர் போராடிவருகிறார். இதற்காக அவர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளியில் வந்தபிறகும் அவர் தன்னுடைய போராட்டத்தை தொடர்ந்துவருகிறார். இன்று கருணாஸ் எம்.எல்.ஏ. மீது புகார் கொடுத்துள்ளார். 


[X] Close

[X] Close