`அ.தி.மு.கவை வசைபாடினீங்க; எப்படிக் கூட்டணி சேர்ந்தீங்க?'- அன்புமணி அளித்த நீண்ட விளக்கம் | anbumani ramadoss talks about admk - pmk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (25/02/2019)

கடைசி தொடர்பு:19:38 (25/02/2019)

`அ.தி.மு.கவை வசைபாடினீங்க; எப்படிக் கூட்டணி சேர்ந்தீங்க?'- அன்புமணி அளித்த நீண்ட விளக்கம்

அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விளக்கம் கொடுத்துள்ளார். 

அன்புமணி

சென்னையில் தி.நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார். அதில், ``கடந்த ஆண்டு கோவையில் பா.ம.க.வின் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது. அதன்படி கூட்டணி முடிவை எடுத்தார். இது கூட்டு முடிவு. எங்கள் கட்சியின் சாதாரண தொண்டர்கள், செயலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் பேசி எடுக்கப்பட்ட முடிவே. இந்த முடிவுக்குப் பிறகு அ.தி.மு.க.விடம் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திட்டோம். அதில், தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் 10 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் கொடுத்தோம். இதையெல்லாம் நீங்கள் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம். முதல்வரும் நிச்சயமாகப் பரிசீலனையில் எடுத்துக்கொள்வதாக உறுதிகொடுத்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையும் இந்தக் கோரிக்கையில் அடங்கும். மேலும், இந்தக் கோரிக்கைகளை செயல்படுத்துவதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம் என முதல்வர் உள்ளிட்டோர் கூறியிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளுக்கு உடன்பட்டதே அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்குச் சென்ற முக்கியக் காரணம். 

அதிகாரத்தில் இருந்தால் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். எங்கள் கோரிக்கைகள் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள். அதை அ.தி.மு.கவுடன் சேர்ந்து நிறைவேற்ற முடியும் என்பதாலேயே கூட்டணி சேர்ந்தோம். எல்லோரும் கேட்கிறார்கள் ஏன் கூட்டணி சென்றீர்கள். 2011-ம் ஆண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று கூறினீர்களே என்று. ஆம், நாங்கள்தான் கூறினோம், மறுக்கவில்லை. அன்றைய சூழல் வேறு. இன்றைய சூழல் வேறு. அன்று ஜெயலலிதா, கருணாநிதி இருந்தார்கள். இன்று அந்த இரு தலைவர்களும் இல்லை. இதனால் தற்போது தமிழக நலன் பறிக்கப்பட்டு வருகின்றன. அதனை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நாங்கள் எடுத்த கொள்கையின் படி எட்டு ஆண்டுகள் இருந்தோம். இத்தனை ஆண்டுகள் கொள்கையின்படி இருந்ததுக்கு ஏதாவது அங்கீகாரம் கிடைத்ததா என்றால் இல்லை. நாங்கள் தவறு செய்தால் விமர்சனம் செய்யலாம். ஆனால் எங்கள் மீது மட்டும் குறிப்பிட்டு விமர்சனம் செய்வது ஏன். 

அன்புமணி

இந்த இரு திராவிட கட்சிகளையும் எதிர்த்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு ஆறு சதவிகிதம் வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் மூன்றாவது இடம் வந்தோம். தேர்தல் அறிக்கை எல்லாம் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள். ஆனால், எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. தமிழக மக்களும் எந்த அங்கீகாரமும் கொடுக்கவில்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் இருந்ததைத்தான் தற்போது பத்துக் கோரிக்கைகளாகக் கொடுத்துள்ளோம். ஒரு சில மாதங்களுக்கு முன்பு நான் பேட்டி கொடுக்கும்போதே சொன்னேன். இனி தமிழகத்தில் எந்தக் கட்சியும் தனியாக நின்று வெற்றிபெற முடியாது எனக் கூறினேன். அதனால்தான் தற்போது எங்கள் வியூகத்தை மாற்றியிருக்கிறோம். தமிழக மக்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். 

பூரண மதுவிலக்கு கோரிக்கையைப் பொறுத்தவரை இதுவரை வெளியிலிருந்து போராடினோம். ஆனால், இனி உள்ளே இருந்து அவர்களிடம் வலியுறுத்துவோம். இதுவரை வெளியிலிருந்து போராடினோம். எங்களால் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் கூட்டணியில் இருந்து அழுத்தம் கொடுத்து கண்டிப்பாகச் செய்வோம். அ.தி.மு.க மீது விமர்சனம் செய்தோம். இல்லை எனக் கூறவில்லை. விமர்சனம் செய்த கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்றால் இந்தியாவில் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்க முடியாது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளது. ஏன் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தி.மு.க செய்யாத விமர்சனமா. தி.மு.க, காங்கிரஸ் மீது திருமாவளவன், வைகோ விமர்சனம் செய்யவில்லையா. இப்போது அவர்கள் எல்லாம் ஒன்றாக இருக்கவில்லையா. தேர்தலுக்காக அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இப்படிப் பல உதாரணங்கள் சொல்லலாம். 

அன்புமணி

நாங்கள் விமர்சனம் செய்ததை மறுக்கவில்லை. அ.தி.மு.க மீது ஊழல் புகார்களை ஆதாரபூர்வமாகக் கொடுத்தோம். இதுதொடர்பாக ஆளுநரிடம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளோம். உண்மைதான். இன்றைக்கும் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. யார் குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். எங்கள் நிலைப்பாட்டிலிருந்து மாறவும் இல்லை. மாறப்போவதும் இல்லை. பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பிறகு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றே கூறியுள்ளோம். அதன்படியே வரவுள்ள 21 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என்றே சொல்லியிருக்கிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close