`வீட்டை அபகரிக்க முயல்கிறார்கள்!’ - நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி | A lady tried to self immolate in nellai collector office

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (25/02/2019)

கடைசி தொடர்பு:16:45 (25/02/2019)

`வீட்டை அபகரிக்க முயல்கிறார்கள்!’ - நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்காசியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த போலீஸ் சோதனையையும் மீறி ஆட்சியர் மனு வாங்கும் அறைக்கு வெகு அருகில் வரையிலும் அவர் மண்ணெண்ணெய் எடுத்துச் சென்றது எப்படி என போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தீக்குளிக்க முயற்சி ராசம்மாளை அழைத்துச் செல்லும் போலீஸார்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இசக்கிமுத்து என்பவர், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கான வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இரு வாயில்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அவற்றிலும் இரவு, பகலாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீஸ் சோதனை இல்லாமல் ஒருவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நுழைய முடியாது. 

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஏராளமான பெண்கள் இன்று மனு அளிக்க வந்திருந்தனர். அவர்களை பெண் காவலர்கள் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், தென்காசி வடகரையைச் சேர்ந்த ராசம்மாள் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அவர் மனுக்களைப் பெறுவதற்கான வரிசையில் நின்றுகொண்டிருந்தார். உள்ளே நுழைய வேண்டிய நேரத்தில் பையில் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தலைவழியாக ஊற்றினார். மொத்தம் 6 குளிர்பான பாட்டில்களைக் கைப்பையில் மறைத்து எடுத்துவந்திருந்த அவர் இரு பாட்டில்களை ஊற்றினார். மற்ற பாட்டில்களில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்ற முயன்றபோது அங்கிருந்த பொதுமக்கள் அவரைத் தடுத்தார்கள். 

தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

உடனடியாக போலீஸார் சென்று அந்த அம்மாவைப் பிடித்து அழைத்து வந்தார்கள். அப்போது பேசிய அவர், ``எனது வீட்டை  ஊரில் உள்ள சிலர் அபகரிக்க முயல்கிறார்கள். அதைத் தடுக்க வலியுறுத்தி உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தேன். அதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை மனுக் கொடுத்தேன். அதற்கும் பதில் இல்லை. 

அதோடு, என்னை ஏமாற்றியவர்கள் எனது வீட்டுக்கே வந்து அடித்து மிரட்டுகிறார்கள். எனது வீட்டை தீ வைத்துக் கொளுத்தப் போவதாக மிரட்டுகிறார்கள். எங்கே சென்று புகார் செய்தாலும் தங்களை எதுவும் செய்ய முடியாது என்றும் சொல்கிறார்கள். அதனால் அச்சம் அடைந்த நான் ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்யும் எண்ணத்தில் வந்தேன். இங்கே என்னைத் தடுத்துவிட்டார்கள். எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று கதறினார்.

காவல்துறையின் பலத்த சோதனையை மீறி, மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   


[X] Close

[X] Close