ராமேஸ்வரம் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா! - நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் | The Rameshwaram Temple Maha Shivarathri festival was started with the flag Festival

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (25/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (25/02/2019)

ராமேஸ்வரம் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா! - நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி  பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோயிலில்,  மாசி மகா சிவராத்திரி திருவிழாவுக்கான   கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதையொட்டி, நாள்தோறும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பு வழிபாடு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மகா சிவராத்திரி திருவிழா, இன்று தொடங்கி 10 நாள்கள் நடக்கிறது. இதற்கான கொடியேற்று இன்று காலை நடந்தது. சுவாமி சந்நிதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மேஷலக்கனத்தில் கொடியேற்றம் நடந்தது. இதனைத் தொடர்ந்து ,சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்.

10 நாள்கள்  நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, மார்ச் 4 அன்று மகா சிவராத்திரி தினத்தன்று அருள்மிகு நடராஜர் வீதி உலாவும், இரவு சுவாமி - அம்பாள் வெள்ளிரத வீதி உலாவும் நடைபெற உள்ளது. மறுநாள் காலை சுவாமி - அம்பாள் தேரோட்டமும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி அமாவாசை  மார்ச் 6-ல் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பகல் 1.31 மணியளவில், சுவாமி - அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

அன்றைய நாளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டு,  மறைந்த தங்கள் முன்னோர்கள் நினைவாகப் புனித நீராடி சிறப்பு வழிபாடு செய்ய உள்ளனர். இதையொட்டி, பக்தர்கள் சிரமமின்றி தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்யத் தேவையான முன்னேற்பாடுகளைத்  திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.


[X] Close

[X] Close