`அனல்காற்றுடன் சுட்டெரிக்கிறது வெயில்!’ -100 டிகிரி ஃபாரன்ஹீட்டில் கொதிக்கும் வேலூர் | Vellore feels the heat as mercury crosses 100 Fahrenheit

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (25/02/2019)

கடைசி தொடர்பு:18:15 (25/02/2019)

`அனல்காற்றுடன் சுட்டெரிக்கிறது வெயில்!’ -100 டிகிரி ஃபாரன்ஹீட்டில் கொதிக்கும் வேலூர்

பருவமழை பொய்த்துப்போனதால், வேலூர் மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரிக்கிறது. அனலைக் கக்கும் சூரியனின், கோர முகத்தால் தண்ணீர் பஞ்சமும் தாண்டவமாடுகிறது. இதனால், பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலில் செல்லும் முதியவர், இளம்பெண்.

வேலூர் மாவட்டத்தில், காலை 8 மணிக்கே சுளீரென்று, தோலைக் கிழிக்கும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிடுகிறது. மாலை 5 மணிவரை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, அனல்காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மண்டையைப் பிளப்பதுபோல் வெயிலடிப்பதால், பெரும்பாலானோர் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள். வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். காற்றில் ஈரப்பதம் குறைந்து, வறண்டக் காற்று வீசுவதால் குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சோர்வடைகிறார்கள். ஜூஸ், தர்பூசணி, இளநீர் மற்றும் நீர், மோர் உள்ளிட்ட நீராகாரங்களைப் பருகி, உடலை ஓரளவு திடப்படுத்திக்கொள்கிறார்கள். 

குடை நிழலில் வியாபாரம் செய்யும் நபர். மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

வேலூர் மாவட்டத்தில் இன்று 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது. ஓரிரு நாளில், 100 டிகிரி ஃபாரன்ஹீட்டாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. கோடை நெருங்குவதற்கு முன்பாகவே, தண்ணீர் பிரச்னையும் தாண்டவமாடுகிறது. வேலூர் மாவட்டத்தில், கடந்த வாரத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் காலி குடங்களுடன், வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். இன்று காலை, வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டை கிராம மக்கள், குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக்கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

கோடைக்காலம் நெருங்குவதற்கு முன்பே இவ்வளவு பிரச்னை என்றால், கோடைக்காலத்தில் அளவில்லாத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.  
 


[X] Close

[X] Close