`இந்த 'ஆஸ்கர்', பேசத் தயங்கிய விஷயங்களைப் பேசவைக்கும்!’- `நாப்கின்’ முருகானந்தம் | Napkin Muruganantham speaks about periods. end of sentence documentary

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (25/02/2019)

கடைசி தொடர்பு:18:51 (25/02/2019)

`இந்த 'ஆஸ்கர்', பேசத் தயங்கிய விஷயங்களைப் பேசவைக்கும்!’- `நாப்கின்’ முருகானந்தம்

  நாப்கின் முருகானந்தம்

`எனது கண்டுபிடிப்பை மையமாகவைத்து எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளதன் மூலம், மூடி மூடி வைக்கப்பட்ட பெண்களின் பிரச்னை, உலக அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விருது, பெண்களின் சுகாதாரத்தைக் காக்கும்'' என்று `நாப்கின்' முருகானந்தம் கூறியுள்ளார்.

சினிமா துறையின் மிக உயரிய அங்கீகாரமாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், இந்திய நேரப்படி  இன்று அதிகாலை நடைபெற்றது. இதில், ஆவணக் குறும்பட விருதை வென்றிருக்கிறது `Period. End of Sentence’ என்ற ஆவணப் படம். மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து, இந்தியப் பெண்கள் எப்படிப்  போராடுகிறார்கள்  என்பதைப் பற்றி பேசும் இந்த ஆவணப்படத்தை இயக்கியது,  ஈரானிய–அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி.

நாப்கின் முருகானந்தம்

கிராமப்புற ஏழைப்  பெண்களும் நாப்கின் உபயோகிக்க வேண்டும் என்பதற்காக, மலிவு விலையில் நாப்கின் தயார் செய்யக்கூடிய  இயந்திரத்தை  உருவாக்கினார், கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம்.  அந்த இயந்திரத்தை கிராமப்புற பெண்களிடம்  கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள், நாப்கின் தயாரிக்கும் பணியில் பெண்களை ஈடுபடுத்துவதில் இருக்கும் சமூகத் தடைகள், அப்படியே பெண்கள் வந்தாலும் அதனை அவர்கள் வெளியில் சொல்ல காட்டும் தயக்கங்கள் என இவற்றையெல்லாம் மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான்  `Period. End of Sentence’ என்ற ஆவணப் படம்

`Period. End of Sentence’ ஆவணப் படம்

தன்னுடைய கண்டுபிடிப்பின் கதையை மையமாகவைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம், ஆஸ்கர் வென்றுள்ளது குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அருணாச்சலம் முருகானந்தம், ``மாதவிடாய் காலத்தில், இந்தியாவின் கிராமத்துப் பெண்கள் சந்திக்கும் அவஸ்தைகளை இந்தப் படத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இந்தக் குறும்படத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `Period. End of Sentence’ குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளதன் மூலம், மூடி மூடி வைக்கப்பட்ட பெண்களின் பிரச்னை உலக அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த விருது ஏற்படுத்தும் விழிப்புணர்வு, பெண்களின் சுகாதாரத்தைக் காக்கும். நாப்கினுக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்துள்ளது வரவேற்கவேண்டிய விஷயம். விளம்பரத்தில் வருவதுபோல் நாப்கினை நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடாது. 3 மணி நேரம்தான் பயன்படுத்த வேண்டும்’’ என்றார் முருகானந்தம். மேலும், ``ஆர்கானிக் முறையில் நாப்கின் தயாரிப்பதே எனது அடுத்த இலக்கு’’ என்றும் அவர் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close