`வரம்பு மீறாதீர்கள்; மைக் ஆஃப் பண்ணுங்க!' - செய்தியாளர்களின் கேள்வியால் கொந்தளித்த அன்புமணி | anbumani got angry while press meet and he left

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (25/02/2019)

கடைசி தொடர்பு:16:28 (25/02/2019)

`வரம்பு மீறாதீர்கள்; மைக் ஆஃப் பண்ணுங்க!' - செய்தியாளர்களின் கேள்வியால் கொந்தளித்த அன்புமணி

அ.தி.மு.க-வுடன் ஏன் கூட்டணி அமைத்தோம் என்பதுகுறித்து விளக்குவதற்காக,  அன்புமணி இன்று செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, செய்தியாளர்கள் சரமாரியாக எழுப்பிய கேள்வியால் கடுப்பான அவர், பாதியிலே எழுந்து சென்றார்.

அன்புமணி

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சிகள் ஆலோசனை நடத்திவந்த நிலையில், அ.தி.மு.க தனது கூட்டணி நிலைப்பாட்டை வெளியிட்டது. `எக்காலத்திலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என்று கூறிவந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது அ.தி.மு.க-வுடன் தேர்தலை சந்திக்கப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க -வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இருந்த ராஜேஸ்வரி ப்ரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். `அ.தி.மு.க-வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறுவதாக' பகிரங்கமாக அறிவித்தார்.

அன்புமணி செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. கூட்டணிகுறித்து எழுந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், இன்று செய்தியாளர்களைச் சந்திப்பதாக அவர் கூறினார். அதன்படி, சென்னை தியாகராய நகரில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றீர்கள். இப்போது எப்படி கூட்டணியில் இணைந்தீர்கள்? தேர்தல் நேரத்தில் இப்படி  அரசியல் நிலைப்பாட்டை மாற்றுவது மக்களை முட்டாளாக்கும் செயல் இல்லையா? என சரமாரியான கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளுக்குப் பதில் கூறிவந்த அன்புமணி, ஒருகட்டத்தில் கோபமடைந்து, செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். `நான் அப்போதே கூறிவிட்டேன். உட்காருங்கள். வரம்பு மீறாதீர்கள். அவங்ககிட்ட இருந்து மைக்கை வாங்குப்பா... சட்டப் பேரவையில மைக் ஆஃப் பண்ற மாதிரி மைக் ஆஃப் பண்ணுங்க' என்றபடி கோபமடைந்தார்.

அன்புமணி ராமதாஸ்

 

அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கூறிய விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்கத் தயாரா? என்று கேட்டபோது,`அநாகரிகமாக நடந்துகொள்ளாதீர்கள். அனைத்துக்கும் ஓர் எல்லை உண்டு!' என்றார். ``விஷ்ணுபிரசாத்தை 32 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர் மட்டுமல்ல, என் சொந்த மைத்துனரும்கூட. இப்படி அவர் விமர்சனம் செய்வார் என கனவிலும்கூட நினைக்கவில்லை. அவரது விமர்சனத்தால் எங்கள் கட்சிக்கோ, கூட்டணிக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் அவரது விமர்சனத்தால் எனக்கு மிகப்பெரிய மனஉளைச்சலும் பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. என் மனைவியும் அவரை நினைத்து வருந்தியுள்ளார்'' என்று கூறி, பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 


[X] Close

[X] Close