`மெகா கூட்டணி, மேஜிக் கூட்டணி எல்லாம் இங்கு எடுபடாது!' - தங்க தமிழ்ச்செல்வன் | AMMK's Thanga Tamilselvan slams ADMK - BJP alliance

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (25/02/2019)

கடைசி தொடர்பு:17:54 (25/02/2019)

`மெகா கூட்டணி, மேஜிக் கூட்டணி எல்லாம் இங்கு எடுபடாது!' - தங்க தமிழ்ச்செல்வன்

"தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையில், மெகா கூட்டணி, மேஜிக் கூட்டணி எல்லாம் எடுபடாது" என்று கூறிய அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், '40 தொகுதிகளிலும் எங்கள் கட்சியே வெற்றிபெறும்' என்றார்.

அன்னதானம் வழங்கும் தங்க தமிழ்ச்செல்வன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பாண்டிக் கோயிலில் 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு  அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய   தங்க தமிழ்ச்செல்வன், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மாநில கட்சிகளோடு கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அதேபோல், எஸ்.டி.பி.ஐ. கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். விரைவில் மாநில கட்சிகள் உடனான கூட்டணி குறித்து நல்ல முடிவு கிடைக்கும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவது உறுதி. இதில் சந்தேகம் இல்லை. மக்களிடம் அ.ம.மு.க. வரவேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான். நிலவும் அரசியல் சூழ்நிலையில், மெகா கூட்டணி மேஜிக் கூட்டணி எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. அ.தி.மு.க- வை பா.ம.க கேவலமாக விமர்சித்த நிலையில், கூட்டணி வைத்திருப்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி.  தேர்தலில் வெற்றிபெற்றால், தமிழகத்தின் உரிமைகளைப் பெற்றுத்தருவோம்.

தங்க தமிழ்ச்செல்வன்

எந்தக் காலத்திலும் பா.ஜ.க கூட்டணியில் சேரமாட்டோம். அதில் உறுதியாக இருக்கிறோம். மக்கள் விரும்பும் கூட்டணியை அ.ம.மு.க அமைக்கும். விஜயகாந்த் உடல்நலத்தை தலைவர்கள் விசாரிப்பதை அவரது மகன் தவறாகப் பேசுவது தவறு. தேர்தல் அறிக்கை தயார் செய்து, கட்சியின் பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுரைப்படி தேர்தல் பணிகளைத் தொடர்வோம். அ.தி.மு.க., தி.மு.க-வை மக்கள் படுதோல்வியடையச் செய்வார்கள். பணத்தில் வேண்டுமானால் ஓ.பி.எஸ் பலமாக இருக்கலாம். மக்களிடம் செல்வாக்கில் பலமாக இல்லை. தொண்டர்கள் போட்டியிட்டால்கூட அ.ம.மு.க கூட்டணிக்கு வெற்றி எளிதில் கிடைக்கும்'' என்றார்.


[X] Close

[X] Close