நியாய விலைக்கடை ஊழியர்களின் சம ஊதிய கோரிக்கை... போராடினால் வேறு துறைக்கு மாற்றம்...!? | Ration shop workers started protest regarding equal salary

வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (25/02/2019)

கடைசி தொடர்பு:18:17 (25/02/2019)

நியாய விலைக்கடை ஊழியர்களின் சம ஊதிய கோரிக்கை... போராடினால் வேறு துறைக்கு மாற்றம்...!?

``நியாய விலைக் கடைகளின் மூலமாகத்தான் பல்வேறு முக்கியமான திட்டங்கள் விரைவாக மக்களைச் சென்றடைகின்றன. ஆனால், அப்படிப்பட்ட முக்கியமான துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கை நிலையோ ஊதிய முரண்பாடுகளால் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது."

நியாய விலைக்கடை ஊழியர்களின் சம ஊதிய கோரிக்கை... போராடினால் வேறு துறைக்கு மாற்றம்...!?

மிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசு ஊழியர்கள், ஊதிய உயர்வு வேண்டியும், மத்திய அரசு ஊழியர்களுடன் நிலவும் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டியும் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, அண்மையில் மாநிலம் தழுவிய அளவில் நடத்திய போராட்டத்தில் ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். போராட்டத்தைக் கைவிடுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதுபோன்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டங்கள் ஒரு புறமிருக்க, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது, ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள், அரசின் முன் வைத்தனர். அந்த வரிசையில் இப்போது நியாய விலைக் கடை ஊழியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

நியாய விலைக் கடை

சமூக ஆர்வலர்கள், பொது மக்களின் போராட்டங்களுக்கு இடையே அரசு ஊழியர்களின் போராட்டங்களும் வலுப்பெற்றுள்ளன. தமிழகத்தில் பொது மக்களுக்கான அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள், நியாய விலைக் கடைகள் மூலம் மட்டுமே மக்களுக்கு விநியோகம் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் நியாய விலைக் கடைகளானது, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுத் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 30,000 க்கும் அதிகமான நியாய விலைக் கடைகள் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடை ஊழியர்கள், ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை தங்களுக்கும் வழங்க வேண்டியும் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் விளைவாக, கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஊழியர்களின் தேவைகளை கேட்டறிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழு, அனைத்துத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் குறைகளைக் கேட்டறிந்து, டிசம்பர் 28-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், ஒன்றரை மாதங்களான நிலையிலும் அந்த அறிக்கை மீது அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் நியாய விலைக்கடை ஊழியர்கள் இப்போது வைக்கும் குற்றச்சாட்டு.

அரசின் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து, பிப்ரவரி 6-ம் தேதி நியாய விலைக் கடை ஊழியர்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக மார்ச் 1-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். அப்படியும் தீர்வு ஏற்படாவிட்டால், செயற்குழுவில் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்போவதாகவும் நியாயவிலைக் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நியாய விலைக் கடை ஊழியர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, பிப்ரவரி 6-ம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அவர்கள் பணி செய்து வந்த துறையிலிருந்து வேறு துறைகளுக்கு மாற்றுவதற்கான அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.

ரேஷன் கடை

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு நியாய விலைக்கடை அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தினேஷ் குமார், ``நியாய விலைக் கடைகளின் மூலமாகத்தான் பல்வேறு முக்கியமான திட்டங்கள் விரைவாக மக்களைச் சென்றடைகின்றன. ஆனால், அப்படிப்பட்ட முக்கியமான துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கை நிலையோ ஊதிய முரண்பாடுகளால் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளின் ஊழியர்களுக்கு ஊதியமாக 12,000 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. நாங்கள் செய்யும் அதே வேலையைத்தான், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களும் செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மாதத்திற்கு 30,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகின்றது. நகர்ப்புறங்களில் உள்ள எங்கள் கடைகளுக்கு ஆயிரம் குடும்ப அட்டைகளைக் கொண்ட ஒரு கடைக்கு 80,000 ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் ஊதியம் மட்டும் குறைந்த அளவுதான் வழங்கப்படுகின்றது. உணவுப் பொருள்களின் எடையில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க பாக்கெட் செய்யப்பட்ட பொருள்களை வேண்டியும்தான் போராட்டம் நடத்துகின்றோம். இந்நிலையில் அடுத்து நாங்கள் போராட்டம் நடத்த இருப்பதைத் தவிர்க்கும் வகையில், எங்களின் போராட்டங்களை முடக்கும்விதமாக, இதற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வேறு துறைக்கு மாற்றப்போவதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு நியாயம் கிடைக்குமா...?


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close