`உண்மையை உடைத்துவிட்டார் பிரேமலதா!'- ஸ்டாலினை விமர்சித்த செல்லூர் ராஜூ | Minister sellur Raju slams DMK president Stalin over election alliance

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (25/02/2019)

கடைசி தொடர்பு:18:45 (25/02/2019)

`உண்மையை உடைத்துவிட்டார் பிரேமலதா!'- ஸ்டாலினை விமர்சித்த செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.  இந்நிலையில், மதுரை கோரிப்பாளையம் தர்காவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பிரியாணி விருந்து நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ``மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு,  தூய மரியன்னை ஆலயத்தில் சர்வமத பிரார்த்தனையும், தெற்கு கிருஷ்ணன் கோயில் தங்கத் தேர் இழுத்தும், இன்று கோரிப்பாளையம் தர்காவில் பிரார்த்தனையும் செய்தோம். தொடர்ந்து பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க மிகப்பெரும் அளவில் வெற்றிபெறும். அ.தி.மு.க, சாதி, மதங்களைக் கடந்த கட்சி. தொடர்ந்து சிறப்பாகச் செல்படும். 5 ஆண்டுகள் கடந்தும் அ.தி.மு.க ஆட்சி சிறப்பாக நடைபெற பிரார்த்தனை செய்தோம். ஜெயலலிதா இருந்திருந்தால், கூட்டணி தொடர்பாக என்ன முடிவுகளை எடுத்திருப்பாரோ அதே நிலைப்பாட்டைத்தான் தற்போது எடுத்துள்ளோம். ஜெயலலிதாவின் முடிவு எவ்வாறு வெற்றியைத் தருமோ, அதைப் போலவே தற்போதும் நடக்கும். எங்கள் கூட்டணியை நினைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கம் வராமல் புலம்புகிறார்.

 

விருந்து வைக்கும் செல்லூர் ராஜூ

தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த சாதிக் பாட்சா கொலை, அண்ணா நகர் ரமேஷ் கொலை, தா.கிருஷ்ணன் கொலை, மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் எரித்துக் கொலை, இவற்றில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். ஸ்டாலின் கொடநாடு கொலை வழக்கைப் பற்றி பேச தகுதி இல்லாதவர். விஜயகாந்த்திடம் கூட்டணி பேசப் போகவில்லை என்றார். இப்ப, பிரேமலதா அதை உடைத்துவிட்டார். ஸ்டாலின் நடத்துவது எல்லாம் நாடகம்தான்’’ என்றார்.


[X] Close

[X] Close