இடுகாட்டில் பறக்கும் கட்சிக் கொடிகள்!- மரணத்திலும் தொடர்ந்த கட்சிப் பாசம் | People raises eye brows over Political parties flags in vellore cemetery

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (25/02/2019)

கடைசி தொடர்பு:19:27 (25/02/2019)

இடுகாட்டில் பறக்கும் கட்சிக் கொடிகள்!- மரணத்திலும் தொடர்ந்த கட்சிப் பாசம்

வேலூர் அருகே, பாலாற்றில் புதைக்கப்பட்ட சடலங்களுக்கு நடுவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிகள் திடீரென நடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கிண்டலடித்துவருகிறார்கள்.

பிணங்களுக்கு நடுவில் நடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிகள்

இப்போதைய பரபரப்பான அரசியல் சூழலில், தலைவர்கள் பேசுவதை ட்ரெண்டிங்கில் மாற்றிக் கலாய்ப்பது, நெட்டிசன்களின் முழு வேலையாக மாறியிருக்கிறது. கொள்கை முரண்பாடற்ற அரசியல் கட்சிகள், கூட்டணி வைப்பதை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து விமர்சனம் செய்துவருகிறார்கள். நெட்டிசன்களுக்கு வேலை வைக்காமல், தாங்களாகவே கலாய்த்துக்கொள்ளும் விதமாக அரசியல் கட்சியினர், அவ்வப்போது சில வேலைகளைச் செய்வதுண்டு. வேலூரை அடுத்த மேல்மொணவூரிலிருந்து லத்தேரியை இணைக்கும் திருமணி பாலாற்றில் உள்ள சுடுகாட்டில், அரசியல் கட்சிகளின் கொடிகள் திடீரென முளைத்துள்ளது, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

பிணங்களுக்கு நடுவில் நடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிகள்

சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களில், அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க கொடிகளை, குச்சிகளில் கட்டி பறக்கவிட்டுள்ளனர். இதனைப் பார்த்துச்செல்லும் பொதுமக்கள், ‘‘இது, அ.தி.மு.க சடலங்கள்... அது, தி.மு.க சடலங்கள்... அதோ தெரியுதே அதுதான், பா.ம.க சடலங்கள்’’ என்று கிண்டலடிக்கின்றனர். மேலும், ‘‘நாட்டைக் கெடுத்தது போதாது என்று சுடுகாட்டிற்கும் வந்துவிட்டீர்களா... மகாபிரபுகளா’’ என்று அரசியல் கட்சித் தலைவர்களைப் பார்த்து, சடலங்களின் ஆத்மாக்கள் ஆதங்கத்துடன் கேட்பதைப் போல் இளைஞர்கள் கலாய்க்கின்றனர். சுடுகாட்டில் பறக்கவிட்டுள்ள கொடிகளுடன், அரசியல் கட்சிகளின் மானமும் சேர்ந்து பறக்கிறது. கொடிகளை செல்போனில் படம்பிடித்து, சமூக வலைதளங்களில் இளைஞர்கள் வைரலாக்கிவருகின்றனர். சுடுகாட்டு அரசியலும் இப்போது சூடுபிடித்திருக்கிறது.


[X] Close

[X] Close