வாக்காளர் சிறப்பு முகாம் பணியில் ஆள்மாறாட்டம்! - கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது | Three arrested over impersonation in specil camp on voters list

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (25/02/2019)

கடைசி தொடர்பு:19:45 (25/02/2019)

வாக்காளர் சிறப்பு முகாம் பணியில் ஆள்மாறாட்டம்! - கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

பரமக்குடியில், வாக்காளர் சிறப்பு முகாமில், வாக்குச் சாவடி அலுவலர் பணியில் ஆள் மாறாட்டம் செய்த கல்லூரி மாணவர் உட்பட 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

வாக்காளர் சிறப்பு முகாமில் ஆள் மாறாட்டம் குறித்து விசாரணை செய்யும் ஆட்சியர்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்றுவருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 1,367 வாக்குச் சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் மேற்கொள்ளப்பட்டது. இங்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியன மேற்கொள்ளப்பட்டன. பரமக்குடி வருவாய் வட்டத்தில் உள்ள மையங்களில்  இப்பணிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வின்போது, பரமக்குடி செளராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமில் பணியாற்ற நியமிக்கப்பட்டிருந்த கீழக்கரை தனியார் கல்லூரி விரிவுரையாளர் கலைமுருகன் என்பவர் அங்கு இல்லை. உறவினர் ஒருவரின் இறப்புக்குச் செல்ல வேண்டியிருந்ததால்,   அவருக்குப் பதிலாக கல்லூரி மாணவரான தினகரன் என்பவரை அங்கு வாக்காளர் சிறப்பு முகாமில் பணியாற்ற வைத்துள்ளார். ஆய்வின்போது இதையறிந்த மாவட்ட ஆட்சியர், உரிய தகவல் இன்றி பணியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, பரமக்குடி வட்டாட்சியர் கதிரேசன், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தினகரன், பணியில் இல்லாத வாக்காளர் சிறப்பு முகாம் அலுவலர் கலைமுருகன் ஆகியோருக்குத் துணையாக இருந்த பரமக்குடி நகராட்சி உதவியாளர் சண்முகவேல் ஆகிய மூவர்மீது பரமக்குடி போலீஸாரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரையும் பரமக்குடி போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


[X] Close

[X] Close