`லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிட வேண்டும்!' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை | Action should be taken on bribe buyers says Madurai high court

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (25/02/2019)

கடைசி தொடர்பு:20:15 (25/02/2019)

`லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிட வேண்டும்!' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

`லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால், லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போடவேண்டும். அப்படியில்லை என்றால், அவர்களின் மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்'' என்று  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மதுரைக்கிளை

மதுரை சூர்யா நகரைச் சேர்ந்தவர் பரணிபாரதி. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "மின் வாரியத்தில் புதிதாக 325 உதவிப் பொறியாளர்கள் தேர்வுசெய்வது தொடர்பாக, மின்வாரியம் சார்பில் 2018 பிப்ரவரி 14ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிக்காக, அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 30-ம் தேதி நடத்திய எழுத்துத்தேர்வில் நானும் பங்கேற்றேன். எழுத்துத்தேர்வுக்கு முன்பு கேள்வித்தாள் வெளியானது. மின்வாரியத்தில் பணிபுரிவோர், கேள்வித்தாள் விவரங்களை தேர்வுக்கு முன்னதாகவே தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

லஞ்சம்

இது தொடர்பான விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் 3.2.2019-ல் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை முடிந்தும் கேள்வித்தாள் வெளியானது எப்படி? என்பது இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், ஒரு பணிக்கு 5 பேர் வீதம் 1575 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கேள்வித்தாள் வெளியானது எப்படி? எனத் தெரியாமலேயே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டது சட்டவிரோதம். எனவே, உதவிப் பொறியாளர் நியமன நடைமுறைக்கும், நியமன உத்தரவு வழங்கவும் தடை விதிக்க வேண்டும். மேலும், உதவிப் பொறியாளர் பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வை ரத்துசெய்து, புதிதாக எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ``மின்வாரிய உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்ற மையங்களில், செல்போன் உள்ளிட்ட எந்த மின்னணுச் சாதனமும் அனுமதிக்காத நிலையில், தேர்வு முடிந்த சில மணி நேரத்தில் எழுத்துத்தேர்வில் கேட்கப்பட்ட 120 கேள்விகளும், அதற்கான விடைகளும் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி?' என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

 அரசு அலுவலகங்கள்


இதனால், மின்வாரிய உதவிப் பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். `அரசுத் துறைகளின் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது.  சிசிடிவி கேமரா, செல்போன் பயன்பாடுகளால் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால், லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்கள்மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்ய வேண்டும். இதுபோன்ற கடுமையான தண்டனை வழங்கினால்தான் லஞ்சப் பழக்கம் ஒழியும். இப்படி செய்தால்தான், லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற அவர்களின் எண்ணத்தை மாற்ற முடியும்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  இதையடுத்து, இந்த வழக்கு  விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.


 


[X] Close

[X] Close