`தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்!’ - ஸ்டாலின் | Will conduct local body election after come to power, says DMK president MK Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (25/02/2019)

கடைசி தொடர்பு:21:40 (25/02/2019)

`தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்!’ - ஸ்டாலின்

“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால்தான் ஊராட்சிப் பகுதிகளில் அடிப்படை பிரச்னைகள்கூட தீர்க்கப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்” எனத் தூத்துக்குடியில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.கவின் ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடக்கிறது. துாத்துக்குடியில் ஏற்கெனவே கனிமொழி தலைமையில் ஊராட்சி சபைக் கூட்டங்களும் பூத் ஏஜென்ட்டுகள் கூட்டமும் நடந்தது. இந்நிலையில், இன்று தெற்கு, வடக்கு மாவட்டங்கள் சார்பில், ஊராட்சி சபைக் கூட்டங்களும் பூத் ஏஜெண்ட்டுகள் கூட்டமும்  நடந்தது. இந்தக் கூட்டங்களில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்து  கொண்டார். முன்னதாக, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சவாப்பேரியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்பிரமணியத்தின் வீட்டுக்குச் சென்று அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

தி.மு.கவின் ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூட்டுடங்காடு பகுதியில் நடந்த, ஊராட்சி சபைக் கூட்டத்தில், ஸ்டாலினே கையில் மைக் எடுத்துக்கொண்டு பெண்களுக்கு மத்தியில் சென்று அவர்களிடம் குறைகள் கேட்டு குறித்துக் கொண்டார். சாலை வசதி, ரேஷன் கடை, நூலகம், பேருந்து நிறுத்தம், டாஸ்மாக் கடை அகற்றம் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினர். தொடர்ந்து பேசிய அவர், ``தமிழகத்திலேயே அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பேசிய இந்தக் கூட்டத்தில்தான். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால்தான் உங்களின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். 

தி.மு.கவின் ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

பல முதியவர்கள் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை, கட்சிக்காரர்களாகப் பார்த்துதான் இந்த ஆட்சியில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது எனக் கூறினார்கள். இது மிகவும் வேதனையானது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கட்சியினர் பாரபட்சமில்லாமல் தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். கடந்த 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கிக்குச் சென்று கடன் வாங்க முடியாத சூழல் உள்ளது.

தி.மு.கவின் ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும். கொடநாட்டில் 5 கொலைகள் நடந்துள்ளன. அந்தக் கொலைகளுக்குக் காரணமாக முதல்வரே இருக்கிறார் எனப் பலதரப்பினரும் குற்றம்சாட்டுகிறார்கள். வருகிற எம்.பி தேர்தலிலும், அதனுடன் நடக்கும் இடைத் தேர்தலிலும் தி.மு.க-வுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.   

இந்த ஊராட்சி சபைக் கூட்டத்துக்காகத் தி.மு.க சார்பில் சுமார் 2,000 பெண்கள் கூட்டப்பட்டு கூட்டப்பந்தலில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். கூட்டம் நடந்த பந்தலில் ஸ்டாலினை வரவேற்கும் விதமாக, பந்தல் வாசலின் இருபுறமும் வாழைத்தார்கள் கட்டிவைக்கப்பட்டிருந்தன.  கூட்டம் முடிந்ததும் வாழைத் தார்களை பறித்துச் செல்வதில் பெண்களிடையே போட்டியும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டன. அதேபோல், கூட்டத்துக்கு கூட்டி வரப்பட்ட பெண்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதிலும் பிரச்னை ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close