சாதி மோதலில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை! - 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் | Nellai polytechnic student murdered by 5 members gang

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (25/02/2019)

கடைசி தொடர்பு:22:07 (25/02/2019)

சாதி மோதலில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை! - 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

நெல்லை மாவட்டத்தில் சாதி மோதல் காரணமாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைக் கைதுசெய்யக்கோரி, உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. 

கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை

நெல்லைப் புறநகர் பகுதியில் உள்ள முன்னீர்பள்ளம் கிராமத்தில், இரு சமுதாயத்தினருக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது வழக்கம். கடந்த வாரத்தில் உயிரிழந்த ஒருவரது உடலை எடுத்துச்செல்லும்போது, மாற்று சமுதாயத்தினர் தெருவழியாகச் சென்றுள்ளனர். அப்போது, பூக்களை மாற்று சமுதாயத்தினர் வீடுகளுக்குள் வீசியது மற்றும் பேனரைக் கிழித்தது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. 

இந்த மோதல் அடிதடியாக உருவானதால், இரு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், இரு சமுதாயத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். முன்னீர்பள்ளம் போலீஸார், இரு தரப்பினரையும் அழைத்து சமசரசம் பேசி  அனுப்பி வைத்துள்ளனர். இந்த முன்விரோதம் காரணமாக, இரு தரப்பு இளைஞர்களும் கோபத்தில் இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில், கீழ் முன்னீர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற 19 வயது இளைஞர் பைக்கில் வந்திருக்கிறார். 

சாலை மறியல், பதற்றம்

தனியார் பாலிடெக்னிக்கில் ஏ.சி மெக்கானிக் முதலாம் ஆண்டு படித்துவரும் ராஜா, கல்லூரி முடிந்து வீட்டுக்கு பைக்கில் வந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்திருக்கிறது. திடீரென ஒரு கும்பல் வழிமறித்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், நிலைதடுமாறி கீழே விழுந்தபோது, அந்தக் கும்பல் கொடூரமாக வெட்டியிருக்கிறது. அதில் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த ராஜாவின் உறவினர்கள், கொலையாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி நெல்லை - அம்பாசமுத்திரம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அதனால், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற நெல்லை மாவட்ட எஸ்.பி-யான அருண் சக்திகுமார், மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

பதற்றம்

கொலையாளிகள் குறித்த விவரங்கள் தெரியவந்திருப்பதால், அவர்களை உடனடியாகக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, போலீஸார் உத்தரவாதம் அளித்தார்கள். அதனால், பலியான ராஜாவின் உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த கொலைச் சம்பவத்தால் முன்னீர்பள்ளம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  
 


[X] Close

[X] Close