தற்கொலையைத் தடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம்! | Fire Fighting Vehicles placed in Virudhunagar collectorate

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (25/02/2019)

கடைசி தொடர்பு:22:30 (25/02/2019)

தற்கொலையைத் தடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம்!

கடந்த வாரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த 2 பேர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தற்கொலைக்கு முயன்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

தீயணைப்பு வாகனம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடிநீர் பிரச்னை, சுகாதார பிரச்னை, பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளிப்பார்கள். இந்நிலையில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த 2 பேர் தற்கொலை செய்துகொள்வதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனர். ஆனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேன்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இந்த வாரமும் யாரேனும் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தாலோ, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாலோ அவர்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையில் இருந்தனர். பொதுமக்கள் அனைவரும் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர். அசம்பாவிதம் நடந்தால் அவசர அவசரமாகத் தண்ணீரைத் தேடுவதற்குப் பதிலாக முன்கூட்டியே தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருப்பது நல்ல விஷயம்தான் என ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் கூறியபடி சென்றனர்.


[X] Close

[X] Close