`அ.தி.மு.க பக்கம் தொண்டர்களும் தினகரன் பக்கம் குண்டர்களும் இருக்கின்றனர்!’ - ஓ.பி.எஸ் பேச்சு | O Panneerselvam slams ttv dinakaran and stalin

வெளியிடப்பட்ட நேரம்: 21:59 (25/02/2019)

கடைசி தொடர்பு:22:02 (25/02/2019)

`அ.தி.மு.க பக்கம் தொண்டர்களும் தினகரன் பக்கம் குண்டர்களும் இருக்கின்றனர்!’ - ஓ.பி.எஸ் பேச்சு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அ.தி.மு.க வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில், மாபெரும் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னை வியாசர்பாடியில் நடைபெற்றது.

ஓ.பன்னீர் செல்வம்

இந்தப் பொதுக் கூட்டத்தில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பகுதி மக்கள் 23,000 பேருக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது மேடையில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், `எப்படியாவது ஆட்சியைக் கலைக்க வேண்டும் என நினைக்கிறார் டி.டி.வி. தினகரன். தனக்குக் கீழ் எல்லாம் நடக்க வேண்டும், அதிகாரம் தனதாக இருக்க வேண்டுமென நினைக்கிறார். தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். குண்டர்கள்தான் அவர் பக்கம் உள்ளனர். தினகரனுடன் ஸ்டாலினும் கூட்டுசேர்ந்துள்ளார். 2008-ல் ஜெயலலிதா என்னை அழைத்து, தினகரனுடன் எந்தப் பேச்சும் வைத்துக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினார். ஜெயலலிதாவின் ஆன்மாதான் கட்சியை வழிநடத்துகிறது.

தினகரன்

ராகுலைப் பார்த்து அடுத்த முதல்வர் என ஸ்டாலின் சொன்னபோது, ராகுலே மிரண்டுதான்போனார். காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சி காலத்தில்தான் இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். பதுங்கு குழிகளில் இருந்த குழந்தைகள் கொல்லப்பட்டனர். 3 மணி நேரம் உண்ணாவிரதமிருந்தார் கருணாநிதி. நாட்டில் இருப்பதை மீண்டும் சுரண்டி எடுத்துச் செல்லவா காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அமைத்திருக்கிறீர்கள். இந்தியாவிலேயே இதுவரை இல்லாத மெகா கூட்டணியாக வெற்றிக் கூட்டணியாக நம் கூட்டணி இருக்கும். நமக்குள் ஏதேனும் மனக்கசப்புகள் இருந்தால், அவற்றை மறந்து வேலைசெய்து, தேர்தலில் வெல்ல வேண்டும். தினகரனை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. யாராவது அழைப்பார்கள் எனப் பார்த்தார். அவரைப் பற்றி தெரிந்ததால் யாரும் அழைக்கவில்லை. வரும் 2023-க்குள் குடிசைகள் இல்லா மாநிலமாக தமிழகம் மாறும்'' என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில், மக்கள் நலன் விரும்பும் தேசிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் இடம்பெறும். அந்த  வகையில், தற்போது பா.ஜ.க, பா.ம.க ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்துள்ளன. இதைத் தொடர்ந்து, மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி இறுதி வடிவம் முடிவாகும். தே.மு.தி.க-வுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை.

சுமுகமாக பேச்சுவார்த்தை  நடைபெற்றுவருகிறது. விரைவில் நல்ல முடிவு  கிடைக்கும். அ.தி.மு.க கூட்டணி இறுதியான பின்பு, அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இணைந்து, மிகப்பெரிய மாநாடு நடத்துவோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். அ.தி.மு.க கூடுதல் பலத்துடன் உள்ளது. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெறும்'' என்றார்.


[X] Close

[X] Close