``அரசியல் தலைவருக்கான இலக்கணம் கமலுக்கு இல்லை" – அமைச்சர் கடம்பூர் ராஜூ | Minister kadambur raju Slams kamal

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (26/02/2019)

கடைசி தொடர்பு:07:55 (26/02/2019)

``அரசியல் தலைவருக்கான இலக்கணம் கமலுக்கு இல்லை" – அமைச்சர் கடம்பூர் ராஜூ

``ஒரு அரசியல் தலைவருக்கான இலக்கணம் கமலுக்கு இல்லை. மக்களால் அவர் நிராகரிக்கப்படுவார். அரசியலில் மட்டுமல்ல, பொது வாழ்வில் இருந்தும் அவர் காணாமல்போவார்” எனச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழாக்களில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ``ஒரு அரசியல் தலைவருக்கான இலக்கணம் கமலுக்கு இல்லை. எதைச் சொன்னாலும் பொத்தாம் பொதுவாகவே பேசிவருகிறார். அரசியல் அரிச்சுவடியே தெரியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டு விழித்துக்கொண்டிருக்கிறார். மாண்பு போய்விட்டது எனச் சொல்லும் அவர், ஒரே இடத்தில் பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டு சந்திக்கத் தயாரா? இதுவரை பேசிய எதையும் நிரூபிக்கத் தவறிய கமல்ஹாசன், மக்களால் நிராகரிக்கப்படுவார். அரசியலில் மட்டுமல்ல பொதுவாழ்வில் இருந்தும் அவர் காணாமல்போவார்.

அமைச்சர்

கனிமொழி, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய நேரத்தில், பழத்தைச் சாப்பிட்டவர் ஒருவர், அதைப் பார்த்துக்கொண்டிருந்தவர் மீது வழக்கா? என மறைந்த அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்தார். காங்கிரஸ்காரர்களுக்கு அதில் தொடர்பு உண்டு என மறைமுகமாகச் சொன்னதோடு மட்டுமில்லாமல், அவர்களெல்லாம் வழக்கில் சேர்க்கப்படாமல் கனிமொழி, ராசாவை மட்டும்  சேர்த்ததற்காக 'கூடா நட்பு கேடாய் முடியும்' எனவும் கூறினார். 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு வந்த உடனே, நாங்கள் தெரியாமல் அவர்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நாங்கள் அனுபவிக்கிறோம் என காங்கிரஸைச் சொன்னார். அந்தக் காங்கிரஸுடன் இன்று கூட்டணி வைத்துள்ளது தி.மு.க. யார் முரண்பாடான கூட்டணி வைத்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

தேர்தல் வரும் நேரத்தில் கொள்கைகள் வேறாக இருக்கலாம். தேர்தலைச் சந்திப்பதற்காக கூட்டணிவைப்பது காலம் காலமாய் நடந்து வருகிறது. அறிஞர் அண்ணாவும், மூதரறிஞர் ராஜாஜியும் எதிர்மறை கொள்கைகள் கொண்டவர்கள். ஆனால், தேர்தல் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும். இங்கே திராவிடப் பாரம்பர்யம் வர வேண்டும் என்று அண்ணா கூட்டணி அமைத்தார். கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது அவர்களது விருப்பம். நாங்கள் அதனை விமர்சனம் செய்யவில்லை. அதேபோல் இது எங்களுடைய விருப்பம். கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராகவும், மகளிரணிச் செயலாளராகவும் உள்ளார். ஆனால், தரமில்லாமல் விமர்சிக்கிறார். இது மக்களிடையே எடுபடாது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close