``தேர்தலைப் புறக்கணித்து, கறுப்புக்கொடி ஏற்றுவோம்!’ - சாலை வசதி கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு | Request to district administration regarding roadways

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:09:00 (26/02/2019)

``தேர்தலைப் புறக்கணித்து, கறுப்புக்கொடி ஏற்றுவோம்!’ - சாலை வசதி கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு

சாலை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஈங்கூர் ரோடு மாரியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்தனர். ‘எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை அமைத்துத் தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், தற்போது வரை சரியான சாலை வசதி செய்து தராத காரணத்தால், எதிர்பாராத விபத்துகளைச் சமயங்களில் சந்திக்க நேரிடுகிறது’ என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர்கள், ``சாலை அமைத்துத் தருகிறேன் என இருந்த சாலையையும் வெட்டி, கிராவல் மண்ணைக் கொட்டி சாலையைக் கெடுத்துவைத்திருக்கிறார்கள். சாலையில் தண்ணீர் தூக்கிச் செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் சிரமமாக இருக்கிறது. எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக, சாலை அமைத்துத் தர வேண்டுமென அதிகாரிகளைச் சந்தித்து பலமுறை மனுக்கள் அளித்திருக்கிறோம். ஆனால், தற்போது வரை சாலை அமைத்துக் கொடுக்கவில்லை. இன்னும் ஒரு வாரம்தான் பொறுத்திருப்போம். அதற்குள் எங்கள் பகுதியில் சாலை அமைத்துக் கொடுக்கவில்லையென்றால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்து, வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிப்போம்” என்று கூறினர்.


[X] Close

[X] Close