`குழந்தைகளுக்கு ஆபத்தான பண்டங்களை விற்பதில்லை!'- அசத்தும் மளிகைக்கடை தாத்தா | shop keeper bans chips items for children in pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:12:00 (26/02/2019)

`குழந்தைகளுக்கு ஆபத்தான பண்டங்களை விற்பதில்லை!'- அசத்தும் மளிகைக்கடை தாத்தா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள ஆவணத்தாங்கோட்டை மேற்குப் பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அருகே மளிகைக்கடை நடத்திவருகிறார், வேலு தாத்தா. இவர், சமீபத்தில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, ஆபத்து என்று தெரியாமல் தன் கடையில் விற்பனைக்காக வாங்கிவைத்திருந்த குர்குரே, லேஸ் பாக்கெட்டுகளை  கடையை விட்டு முற்றிலும் அப்புறப்படுத்தி அசத்தியுள்ளார்.

மளிகைக் கடை தாத்தா

இதுகுறித்து வேலு தாத்தாவிடம் பேசினோம். "புதுக்கோட்டை அருகே, ஆவணத்தாங்கோட்டை நடுநிலைப் பள்ளிக்கு அருகிலேயே நான்  6 வருஷமா மளிகைக்கடை வச்சிருக்கேன். தினசரி இருநூறு முன்னூறு வரும் வருமானத்தில் பாதி, அந்தப் பிள்ளைகள் கொடுக்கிறதுதான். பெரிய லாபம் எல்லாம் ஒண்ணும் இல்லை. பிள்ளைகள் பள்ளி இடைவேளை நேரத்தில் வருவாங்க. வந்தா, பெரும்பாலும் குர்குரே, லேஸ் பாக்கெட்டுகளைத்தான் அந்தப் பிள்ளைகள் கேட்கும். பிள்ளைகள் விரும்பி கேக்குறதால, அதோட பாதிப்பு தெரியாமல் நானும் அடிக்கடி வாங்கி வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நாளைக்கு முன்னால, குர்குரே ஆபத்துனு பேப்பர்ல போட்டிருந்துச்சு. குழந்தைங்க வாய், வயிறு வெந்து புண்ணா போயிருங்கிறத அப்பதான் தெரிஞ்சுகிட்டேன். பள்ளி வாத்தியார் கிட்டயும் இதுபத்தி கேட்டேன். அவங்களும் ஆபத்துன்னுதான் சொன்னாங்க. உடனே, எதப்பத்தியும் யோசிக்கல. இருந்த எல்லா பாக்கெட்டுகளையும் கடையை விட்டு அகற்றிட்டேன்.

குர்குரே, லேஸ் இல்லாத மளிகைக் கடை தாத்தா கடை

இதேபோல, பாக்கெட்டுல அடைக்கப்பட்ட தீங்கான எல்லா உணவுப்பொருள்களையும் விரைவில் அகற்றிடுவேன். ஆபத்து  தெரியாமல், ரொம்ப நாள் இந்தப் பொருள்களை  விற்பனை செஞ்சுகிட்டு இருந்தோம்கிறதுதான்  கொஞ்சம் வேதனையாக இருந்துச்சு. ஊர்க்காரங்ககூட ஏதாவது பொருள் வாங்கிட்டு, கடன் சொல்லிட்டுப் போவாங்க. ஆனா, பிள்ளைகள் கடனே சொல்ல மாட்டாங்க. காசு இருந்தா வாங்கி சாப்பிடுங்க. இல்லைனா கடைக்கே வராதுங்க. அப்படியே வந்தாலும், காசு இல்லாம வந்தா பிஸ்கட் கொடுப்பேன். காசு கொடுக்காம அத வாங்குதுங்க. ரொம்ப மல்லுக்கட்டணும். அதுங்களுக்கு முன்னால நாம செய்தது எல்லாம் சிறிய விஷயம்தான்" என்றார்.


[X] Close

[X] Close