`வரைமுறையின்றி ஓட்டுகிறார்கள்; இனி லைசென்ஸ் வழங்குவதில் கடுமையாக்கப்படும்!'- எம்.ஆர்.விஜயபாஸ்கர் | rules will follow on strictly for issuing license says tn minister mr vijayabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (26/02/2019)

கடைசி தொடர்பு:12:15 (26/02/2019)

`வரைமுறையின்றி ஓட்டுகிறார்கள்; இனி லைசென்ஸ் வழங்குவதில் கடுமையாக்கப்படும்!'- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

``4 வழிச்சாலைகளில் வாகனங்களை சில டிரைவர்கள் வரைமுறையின்றி ஓட்டிச் செல்கிறார்கள். இதனால் போக்குவரத்துத்துறை லைசென்ஸ் வழங்கும் முறையைக் கடுமையாக்க உள்ளது" என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்துக்கு நாமக்கல் வள்ளிபுரத்தில் ரூ.1¼ கோடியில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, `தமிழகத்தில் சாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் விபத்துகள் நடைபெற்று வருவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலான நேரங்களில் விபத்துக்கு வாகன ஓட்டுநர்களின் கவனக் குறைவு காரணமாக இருந்து வருகிறது. எனவே டிரைவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி விபத்தைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், `எனக்கு முன்பு இங்கு பேசிய லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி, தமிழகத்தைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கர்நாடகாவில் பதிவு செய்யப்படுவதாகக் கூறினார். கர்நாடகாவில் பதிவுக் கட்டணம் எவ்வளவு வசூலிக்கிறார்கள். தமிழகத்தில் எவ்வளவு என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் மட்டுமே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டவுடன் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எதிர்த்து குரல் கொடுத்தார். டிரைவர் பற்றாக்குறை உள்ள நிலையில் விவசாயம் மற்றும் நெசவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பைத் தருவது மோட்டார் வாகனத் தொழில் என்பதால் அதற்கான சரத்தை நீக்க வலியுறுத்தினார். தற்போது மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் அதற்கான சரத்தை நீக்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

இந்திய அளவில் ஆண்டுக்கு 1½  லட்சம் பேர் விபத்தில் இறக்கிறார்கள். தமிழகத்தில் 16,680 பேர் மரணமடைந்துள்ளனர். இது துல்லியமான புள்ளிவிவரம் ஆகும். ஆனால் மற்ற மாநிலங்களில் இதுபோன்று கடைபிடிப்பது இல்லை. சாலை விபத்துகள் நடக்கும் போது சமரசம் செய்து கொள்வதால், இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களில் குறைவாக உள்ளது. 4 வழிச்சாலைகளில் வாகனங்களை சில டிரைவர்கள் வரைமுறையின்றி ஓட்டிச் செல்கிறார்கள். எனவே, டிரைவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். போக்குவரத்து துறையும் லைசென்ஸ் வழங்கும் முறையைக் கடுமையாக்க உள்ளது. மேலும், விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமத்தை ஒரு மணிநேரத்திலேயே புதுப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

செங்கல்பட்டு-திருச்சி இடையே விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு தானியங்கி மூலம் அபராதம் விதிக்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது. மேலும் அதிக விபத்து நடக்கும் 5 சாலைகளில் 400 கேமராக்கள் வசதியுடன், போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்க உள்ளோம். தமிழகத்தில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தி இருப்பதால்தான் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close