அய்யா வைகுண்டர் அவதார தினவிழா!- 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு | holiday announced for swamithoppu ayya vaikundar avathara day festival

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (26/02/2019)

கடைசி தொடர்பு:12:30 (26/02/2019)

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா!- 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

சாமித்தோப்பு

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு கிராமத்தில் பொன்னுமாடன் மற்றும் வெயிலாள் தம்பதியினருக்கு 1809-ம் ஆண்டு பிறந்த குழந்தைக்குப் பெற்றோர், `முடி சூடும் பெருமாள்' எனப் பெயரிட்டனர். சாதி பாகுபாடு மிகுந்திருந்த அந்தக் காலகட்டத்தில் இந்தப் பெயர் வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து முடிசூடும் பெருமாள் என்ற பெயரை முத்துக்குட்டி என மாற்றினர். உரிய வயதில் முடிசூடும் பெருமாளுக்கு திருமால் வடிவு என்பவரைத் திருமணம் செய்து வைத்தனர்.

சாமித்தோப்பு

அவருக்கு 22 வயது ஆனபோது உடல் நிலை சரியில்லாமல் போனதால் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது தாய் வெயிலாள், மனைவி திருமால் வடிவு ஆகியோர் ஒரு தொட்டில் கட்டி அதில் முடிசூடும் பெருமாளைப் படுக்கவைத்து திருச்செந்தூர் மாசித் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றனர். வழியில் உணவு அருந்துவதற்காகத் தொட்டிலை இறக்கி வைத்தபோது அதிலிருந்து எழுந்த முடிசூடும் பெருமாள் நடந்து கடலுக்குள் சென்றார். மூன்றுநாள்கள் கடந்தபிறகு கடலிலிருந்து திரும்பி வந்தவர் கரையில் காத்திருந்த தாயிடம் `நான் வைகுண்டராக வந்திருக்கிறேன்' என்றார். மூன்று நாள்களாகத் திருமால் கலியுகம் குறித்து போதித்து வைகுண்டர் எனத் திருநாமம் சூட்டி அனுப்பியதாக ஐதீகம்.

சாமித்தோப்பு

அதன்பிறகு முடிசூடும் பெருமாள், `அய்யா வைகுண்டர்' என அழைக்கப்பட்டார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் புரட்சி செய்து மன்னரின் மனதை மாற்றி அவரை நல்வழிப்படுத்தினார் அய்யா வைகுண்டர். திருச்செந்தூர் கடலிலிருந்து வைகுண்டராகத் திரும்பி வந்த கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ம் நாள் அய்யாவின் அவதாரப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

சாமித்தோப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கையில் அன்புக்கொடி ஏந்தி `அய்யா சிவ சிவ சிவ அரகரா அரகரா' என நாமம் சொல்லியபடி சாமித்தோப்பை வந்தடைகின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள அய்யாவழி பதிகளில் அன்னதானம் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு வரும் மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டர் அவதாரத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close