"எல்லையில் போர் நடத்தினாலும் பா.ஜ.க வாக்குவங்கி உயராது!"- முத்தரசன் | mutharasan slams Modi and bjp after balkot attack

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (26/02/2019)

கடைசி தொடர்பு:14:20 (26/02/2019)

"எல்லையில் போர் நடத்தினாலும் பா.ஜ.க வாக்குவங்கி உயராது!"- முத்தரசன்

"பாகிஸ்தான் - இந்தியா இடையே போர் நடந்தால், அது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும். எல்லையில் போர் நடத்தி தனது பலத்தை காண்பித்தாலும், பா.ஜ.க-வின் வாக்கு வங்கி ஒருபோதும் உயராது" என்று முத்தரசன்  கூறியுள்ளார்.

முத்தரசன்

கோவையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "நாட்டில் ஜாதி, மத அரசியல் தலைதூக்கியிருக்கிறது. வருகின்ற தேர்தல், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் கறுப்புப் பணம் மீட்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மோடி கொடுத்தார். ஆனால் இப்போது, தான் சொன்ன வாக்குறுதிகள் குறித்துப் பேச மறுக்கிறார். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்றவற்றால் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இயற்கைச் சீற்றங்களால்  தொடர்ந்து பாதிக்கப்புக்குள்ளான தமிழகத்துக்கு, மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை. தம்பிதுரை மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், இப்போது இந்த அடிமை பினாமி அரசு அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.

பாகிஸ்தான் - இந்தியா இடையே போர் நடந்தால், அது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும். எல்லையில் போர் நடத்தித் தனது பலத்தை காண்பித்தாலும், பா.ஜ.க-வின் வாக்குவங்கி ஒருபோதும் உயராது.

தமிழகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற ஒன்று இருந்தாலும், ஆளுநர் மூலமாகப் பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு மாநில உரிமைகளில் தலையிடுகிறது. அவர்களுடன் பா.ம.க-வும் கூட்டணி சேர்ந்திருக்கிறது. அ.தி.மு.க-வின் கூட்டணி, மர்மக் கூட்டணி. முகிலன் விவகாரத்தில் முதல்வரின் பேச்சு பொறுப்பற்றதாக இருக்கிறது. முகிலனைக் கண்டுபிடிப்பது அரசின் கடமை என்றவர், எங்களுடையது வெளிப்படையான கூட்டணி. நாங்கள் கொள்கை அடிப்படையில், மாநில உரிமைகளைக் காப்பதற்காக தி.மு.க, ம.தி.மு.க ,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து செயல்பட இருக்கிறோம். 

கோவையில், 27-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 9 கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைத்து  மிகப்பெரிய அரசியல் எழுச்சி மாநாடு நடத்த இருக்கிறோம். அந்த மாநாட்டில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க-வோடு சேர்ந்து மக்கள் பிரச்னைகளுக்காகப்  போராடிவருகிறோம். ஆகையால், எங்களுடையது சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. பா.ஜ.க-வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக்  கூட்டணி. தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க -வுடன் எங்களது தேர்தல் பேச்சுவார்த்தை குழு, முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அது, எங்களுக்கு திருப்திகரமாக இருந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது" என்றார்.

  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close