பேச்சை நிறுத்தாத பஞ்சாயத்து சேர்மன் - கோபத்தில் வெளியேறிய பினராயி விஜயன்! | Kerala cm pinarayi Vijayan left government function after panchayat chaiman's long welcome address

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (26/02/2019)

கடைசி தொடர்பு:15:15 (26/02/2019)

பேச்சை நிறுத்தாத பஞ்சாயத்து சேர்மன் - கோபத்தில் வெளியேறிய பினராயி விஜயன்!

கொல்லம் மாவட்ட மருத்துவமனையில் நடந்த விழாவில் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் நீண்ட வரவேற்புரையாற்றியதால் கோபமான முதல்வர் பினராயி விஜயன் அந்த விழாவில் சிறப்புரையாற்றாமல் இறங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்


கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். முதலில் கொல்லம் மாவட்ட மருத்துவமனை நிகழ்ச்சியில் பினராயி பங்கேற்றார். அதில் முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் வரவேற்புரை கூறிய கொல்லம் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் ராதாமணி, அழைப்பிதழில் இருந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட பெயர்களை கூறி நீண்ட நேரம் பேசியிருக்கிறார். ராதாமணி அருகே சென்று உரையை நிறுத்தும்படி சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறினார். இருப்பினும் ராதாமணி தொடர்ந்து பேசினார். இதனால் கோபமான முதல்வர் பினராயி விஜயன் அவரது பேச்சை நிறுத்தும்படி கூறிவிட்டு, குத்துவிளக்கேற்றி மருத்துவமனையின் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பினராயி விஜயன்

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உரையாற்றும்போதே மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார் முதல்வர் பினராயி விஜயன். இதனால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்ததாக முந்திரி விவசாயிகளுக்கான இரண்டாம்கட்ட கடன் வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் பினராயி விஜயன் சிறப்புரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார். இதில் அமைச்சர் மேல்சிகுட்டியம்மா சிறப்புரையாற்றினார். முதல் நிகழ்ச்சியில் ராதாமணி நீண்டநேரம் பேசியதால் கோபமான முதல்வர் பினராயி விஜயன் இந்த நிகழ்ச்சிகளில் பேசாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் தொண்டையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக முதல்வர் இந்த நிகழ்ச்சிகளில் பேசாமல் சென்றுவிட்டதாக அமைச்சர்கள் தரப்பில் கூறப்பட்டது.


[X] Close

[X] Close