மீண்டும் போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்! | jacto-geo announce their next protest

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (26/02/2019)

கடைசி தொடர்பு:15:30 (26/02/2019)

மீண்டும் போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்!

ஜாக்டோ-ஜியோ போராட்டம்

ரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவினர், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளைக் களையச் சொல்லியும், பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மாதம் ஒரு வாரக் காலங்களுக்கு மேலாகத் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசின் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டனர்.

ஜாக்டோ-ஜியோவினர் முன் வைத்து நடைபெற்ற கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாத நிலையே நீடிக்கின்றது. சில நாள்களில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளும், அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல்களும் நடைபெற உள்ள இந்த நிலையில், மீண்டும் மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோவினர் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பெருவாரியான பள்ளிகள் இயங்க முடியாமல் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்டோ ஜியோ போராட்டம்

இதுகுறித்து பேசிய ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த சுப்ரமணியன், ``எங்களுடைய கோரிக்கைகளுக்காக பல கட்டங்களாக  போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், அரசின் தரப்பிலிருந்து எங்களுடைய கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் விதமாக எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. அரசு போராட்டத்தைக் கைவிடக் கோரி கேட்டுக் கொண்டதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கக்  கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தைக் கைவிட்டோம்.

ஆனால், போராட்டத்தைக் கைவிட்டப் பின்னர் பல பணியாளர்களுக்கும் பணியிட மாறுதல்களும், கிரிமினல் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இந்த நிலையில், ஏற்கெனவே போராட்டத்தில் முன்வைத்து ஈடுபட்ட அதே 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும், ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளையும், வழங்கப்பட்ட பணி மாறுதல்களையும் திரும்ப பெறச் சொல்லியும் வரும் மார்ச் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.


[X] Close

[X] Close