`30 வருஷ கோரிக்கை நிறைவேறல; கலெக்டர் ஆபீஸ்ல குடியிருக்கப்போறோம்!'- நாடோடியின மக்கள் கண்ணீர் | Perambalur Narikuravar community people to stage protest over 30 year old demand

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (26/02/2019)

கடைசி தொடர்பு:15:45 (26/02/2019)

`30 வருஷ கோரிக்கை நிறைவேறல; கலெக்டர் ஆபீஸ்ல குடியிருக்கப்போறோம்!'- நாடோடியின மக்கள் கண்ணீர்

``முப்பது ஆண்டுகாலமாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வேண்டுமென்றே அலைக்கழிக்கிறார்கள் இந்த அதிகாரிகள். இனிமேலும் பொறுக்கமாட்டோம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறப் போகிறோம்'' என்று எச்சரித்துள்ளனர் நாடோடியின மக்கள். 

                                            நாடோடியின மக்கள்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள இறையூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட நாடோடியின மக்கள் வசித்துவருகின்றனர். தமிழ்நாட்டிலேயே அதிகமாகவும், கூட்டமாகவும் பெரம்பலூரில்தான் வசித்துவருகின்றனர். இவர்கள் பாசிமணி, மாலை கோத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது அப்போதைய ஆட்சியர் நாடோடியின மக்கள் நிலையாக வாழ்வதற்காக இடமும் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ள மூன்று ஏக்கர் நிலத்தையும் கொடுத்துள்ளார். அதன்படி அப்பகுதி நரிக்குறவர்கள் மூன்று ஏக்கர் நிலங்களை வைத்துக்கொண்டு விவசாயம் செய்து வந்தனர்.

                                              பெரம்பலூர்

இவர்கள் கடந்த ஆண்டு மக்காச்சோளத்தில் அதிகப்படியான சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளனர். இந்த ஆண்டு படைப்புழு தாக்கத்தால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். இதற்குத் தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை கேட்டு ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், அப்பகுதியில் வறட்சி நிவாரணத் தொகை கணக்கெடுப்பு சென்றபோது பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இங்கு பாதித்தவர்களைக் கணக்கெடுக்காமல் விட்டுச் சென்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம்

இந்த நிலையில், இறையூர் நரிக்குறவர்கள் கடந்த 30 ஆண்டுகளாகத் தாங்கள் பயன்படுத்தி வரும் வேளாண் விளை நிலங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். அதில் தங்களுடைய பட்டா, நிவாரணத் தொகையும் விரைந்து வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர். 

                                          நாடோடியின மக்கள்


மனு அளித்துவந்த நாடோடியின மக்களிடம் பேசினோம். ``எங்கள் மக்கள் எந்த இடத்திலும் நிலையாக வாழ்ந்தது கிடையாது. எங்களை நிலையாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காக 30 வருடங்களுக்கு முன்பு திருச்சி கலெக்டர் எங்களுக்கு நிலமும் இருக்க இடமும் கொடுத்தார். அன்றிலிருந்து இன்று வரையிலும் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். கூடவே ஊசிமணி, பாசிமணி விற்று எங்களது குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்த நிலையில், சோளத்தில் படைப்புழு தாக்குதலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். படைப்புழு தாக்குதலால் எல்லோருக்கும் நிவாரணம் வழங்குவதாக அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு எழுதிச் சென்றார்கள். ஆனால், எங்களை மட்டும் விட்டுவிட்டுச் செல்வது எந்த விதத்தில் நியாயம். நாங்களும் மனிதர்கள்தானே. எங்கள் நிலங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுத்தோம். நடவடிக்கை இல்லை. இனியும் தாமதித்தால் ஆட்சியர் அலுவலகத்தில் குடிபுகுவோம்'' எனக் கொந்தளித்தனர்.


[X] Close

[X] Close