`முகிலன் உயிருக்குத் தமிழக அரசுதான் பொறுப்பு!’ - சுப.உதயகுமாரன் | government is responsible for mugilan's life, says sp.uthayakumaran

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:16:00 (26/02/2019)

`முகிலன் உயிருக்குத் தமிழக அரசுதான் பொறுப்பு!’ - சுப.உதயகுமாரன்

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான முகிலன் காணாமல் போய் 11 நாள்களாகிவிட்ட நிலையில், அவரது உயிருக்குத் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அணு சக்திக்கு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் தெரிவித்தார். 

முகிலன் உயிருக்கு ஆபத்து - சுப.உதயகுமாரன்

அகில இந்திய மக்கள் மேடை, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஆகியவை சார்பாக மார்ச் 1-ம் தேதி பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அணு உலைப்பூங்கா அமைக்க எதிர்ப்பு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், குமரி மாவட்டம் கோவளத்தில் துறைமுகத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரு அணு உலைகள் உள்ள நிலையில் அவை இயங்குகிறதா என்பதே தெரியாத நிலையில் கூடுதலாக 4 அணு உலைகளை அமைத்து அணு உலைப் பூங்கா அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. அபாயகரமான அணு உலைப் பூங்காத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும், 

சுப.உதயகுமாரன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குக் கொள்கைபூர்வமான தீர்மானத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், குமரி மாவட்டம் கோவளம் மணக்குடி பகுதியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக அமைக்க இருக்கும் சரக்குப் பெட்டக மாற்றுத் துறைமுகத் திட்டத்தைக் கைவிட வேண்டும். என்பதை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. 

இந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தால் அன்றைய தினம் குமரி மாவட்டத்துக்கு வருகைதரக்கூடிய பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டங்களில் பங்கேற்போம். 

சுப.உதயகுமாரன்

சுற்றுச்சூழலியல் செயற்பாட்டாளரான முகிலன் காணாமல்போய் 11 நாள்கள் ஆகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும் காவல்துறையும் மெத்தனமாகச் செயல்படுகின்றன. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் உடனடியாக அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்தும் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டுவருவது கண்டனத்துக்குரியது. எழுவரின் விடுதலையை வலியுறுத்தி அற்புதம்மாள் நடத்தும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொள்வோம்’’ எனத் தெரிவித்தார். பேட்டியின்போது வழக்கறிஞர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 
 


[X] Close

[X] Close