`விஜயகாந்த் ஏன் தேவைப்படுகிறார்?’ - அமைச்சர்களுக்குச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி | Why is vijaykanth important for alliance? explains edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (26/02/2019)

கடைசி தொடர்பு:15:51 (26/02/2019)

`விஜயகாந்த் ஏன் தேவைப்படுகிறார்?’ - அமைச்சர்களுக்குச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி

பா.ம.க-வை வைத்து அணியைக் கட்டமைக்க வேண்டும் என்பதால்தான் ராமதாஸிடம் முதலில் பேசினோம். அதுவே, தே.மு.தி.க-வை நாம் முதலில் கையில் எடுத்திருந்தால் பா.ம.க நம்மிடம் வந்திருக்காது. பா.ம.க-வுக்கு அதிகமாகக் கொடுத்ததால், தே.மு.தி.க முரண்டு பிடிப்பது இயல்பானதுதான்

`விஜயகாந்த் ஏன் தேவைப்படுகிறார்?’ - அமைச்சர்களுக்குச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி

தே.மு.தி.க குறித்து நேற்று தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். `தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு வாக்குகள் இல்லாத கட்சி தே.மு.தி.க. அவர்களைப் பற்றிப் பேசுவதால் நாளை கூட்டணி அமைந்தாலும் பாதிப்பு ஏற்படும்’ என விளக்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

விஜயகாந்த், பியூஷ் கோயல்

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அணியில் பா.ம.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் இணைந்துவிட்டன. தே.மு.தி.க, த.மா.கா ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள். கடந்த 19-ம் தேதி சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, தே.மு.தி.க நிர்வாகிகளையும் எதிர்பார்த்திருந்தார் பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல். ` தொகுதிப் பங்கீட்டில் பா.ம.க-வுக்கு இணையாக சீட்டுகளைக் கேட்பதால், தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை' என அ.தி.மு.க தரப்பில் கூறியுள்ளனர். இதன்பின்னர், நேரடியாக விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தினார் பியூஷ் கோயல். இந்தச் சந்திப்பில் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்த், தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து விஜயகாந்தை சந்தித்தனர். ` இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை' என ஸ்டாலின் விளக்கம் அளித்தாலும், ` அரசியல் உட்பட அனைத்தும் பேசப்பட்டது' என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா. 

விஜயகாந்த், ரஜினி

இந்த நிலையில், திருவான்மியூரில் பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ` கூட்டணிக்குள் தே.மு.தி.க வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் பரவாயில்லை' எனத் தெரிவித்தார். இந்தக் கருத்து பரவிக் கொண்டிருந்த அதேநேரத்தில் சேலத்தில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ` தே.மு.தி.க உட்பட சில கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது' என்றார். இதன்பின்னரும், `வாக்குவங்கி இல்லாத கட்சி தே.மு.தி.க' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்தார். ஆனால், இன்று கோயம்பேட்டில் பேட்டி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், ` தே.மு.தி.க-வுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து. அதனால், தே.மு.தி.க உடனான கூட்டணிப் பேச்சு எந்த வகையிலும் பாதிக்காது' என்றார் நிதானமாக. 

அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமாரின் முரண்பட்ட பேட்டிகள் குறித்து, நம்மிடம் பேசிய அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர், `` தே.மு.தி.க விஷயத்தில் ஜெயக்குமார் பேசியதை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை. அமைச்சர்களில் சிலர் தே.மு.தி.க-வுக்கு எதிராகப் பேசி வருவதை சுட்டிக் காட்டிப் பேசிய முதல்வர், ` அவர்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் 3 சதவிகித வாக்குவங்கி இருக்கிறது. குறிப்பாக, அவர்களுக்கு எதிர்ப்பு வாக்குகள் இல்லை. பா.ம.க-வை வைத்து அணியைக் கட்டமைக்க வேண்டும் என்பதால்தான் ராமதாஸிடம் முதலில் பேசினோம். அதுவே, தே.மு.தி.க-வை நாம் முதலில் கையில் எடுத்திருந்தால் பா.ம.க நம்மிடம் வந்திருக்காது. பா.ம.க-வுக்கு அதிகமாகக் கொடுத்ததால், தே.மு.தி.க முரண்டு பிடிப்பது இயல்பானதுதான். அதற்காக வந்தால் வரட்டும், வராவிட்டால் கவலையில்லை என்று பேசுவதெல்லாம் தவறானது. தே.மு.தி.க நம்மிடம் வர வேண்டும். அதற்காக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். அதையும் மீறி அவர் வரவில்லையென்றால், அது விஜயகாந்தின் விருப்பம்' என்றவர், 

விஜயகாந்த்

தொடர்ந்து பேசும்போது, ` தெற்கு மண்டலத்துக்கும் மேற்கு மண்டலத்துக்கும் விஜயகாந்த் தேவைப்படுகிறார். நாம் பேசுவதால் அவர்கள் வருத்தப்பட்டுவிடக் கூடாது. பா.ம.க-வுக்கு 7 ப்ளஸ் 1 எனக் கொடுத்த பிறகு, 14 இடத்தில் போட்டியிட்டவர்களுக்கு குறைத்துக் கொடுப்பதாகச் சொல்லும்போது ஆதங்கம் வரத்தான் செய்யும். தே.மு.தி.க-வுக்கு எதிராக நீங்கள் பேசுவதால், நாளை கூட்டணி அமைந்தால் அது நன்றாக இருக்காது. அவசரப்பட்டு எந்தக் கருத்தையும் வெளியிட்டுவிட வேண்டாம். 2011 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வை முதலில் கூட்டணிக்குக் கொண்டு வரும் முடிவை அம்மா எடுத்தார். அதே அடிப்படையில்தான் இந்தமுறை பா.ம.க-வை உள்ளே சேர்த்துக் கொண்டோம். அம்மாவிடம் இருந்து எவ்வளவோ அரசியல் பாடங்களைக் கற்றுக்கொண்டோம். கூட்டணி விஷயத்திலும் நிதானமாகவே செயல்படுவோம்' எனக் கூறியிருக்கிறார். அவரது கருத்தை அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்" என்றார் விரிவாக. 


[X] Close

[X] Close