பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்! | People staged protest with school students in Tiruppur

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (26/02/2019)

பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திருப்பூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்காத தமிழக அரசைக் கண்டித்து, பள்ளி செல்லும் தங்களின் பிள்ளைகளோடு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்துள்ள கெருடாமுத்தூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காற்றாலை மின்கம்பிகள் கொண்டு செல்லும் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த மின்கம்பிகள் அப்பகுதி வீடுகளின் வழியாகவும், அரசுப் பள்ளி கட்டடத்தை ஒட்டியும் செல்வதால், அன்றாடம் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே, உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என அம்மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், அப்பகுதியில் யாராவது மரணித்தால், அவர்களை அடக்கம் செய்வதற்காக இருந்த மயான நிலத்தையும் தற்போது காற்றாலை கம்பங்கள் வைப்பதற்காக பயன்படுத்திவிட்டனர். அதேசமயம் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு மட்டும் இன்றளவும் சிங்கிள் பேஸ் மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது. இதனால் மின்சார வசதி இருந்தும் நாங்கள் இருட்டிலேயே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இதனால் பள்ளிக்கூடம் செல்லும் எங்கள் வீட்டுக் குழந்தைகள் மாலை நேரங்களில் வீட்டில் பாடம் படிக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கெல்லாம் உச்சமாக எங்கள் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எப்போது எரிய வேண்டும் என்பதைக்கூட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்தான் முடிவு செய்கிறார். எங்கள் பகுதி தெருவிளக்குகளுக்கான சுவிட்ச் பாக்ஸ் அவரது வீட்டுக்கு அருகே இருக்கிறது. அவர் நினைக்கும் நேரத்தில் சுவிட்ச்சை ஆன் செய்கிறார். எங்கள் பகுதி தெருவிளக்கைக்கூட எங்களால் பயன்படுத்த முடிவதில்லை. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டியாக வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்கள் பகுதி பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கெருடாமுத்தூர் பகுதி மக்கள் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள பள்ளிக்குச் செல்லும் தங்களின் பிள்ளைகளையும் அப்பகுதி மக்கள் அழைத்து வந்ததால் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர்கள் தங்களது பகுதிப் பிரச்னைகள் குறித்து மனுவை அளிக்க ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.


[X] Close

[X] Close