`மது போதையில் கார் ஓட்டியதால் விபரீதம்!’ - சுற்றுலா சென்ற 3 பேர் பலியான பரிதாபம் | Car lethal driving - 3 people killed

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:19:00 (26/02/2019)

`மது போதையில் கார் ஓட்டியதால் விபரீதம்!’ - சுற்றுலா சென்ற 3 பேர் பலியான பரிதாபம்

வாணியம்பாடி அருகே மரத்தில், கார் மோதிய கோர விபத்தில், சென்னையைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மரத்தில் மோதிய  கார்

சென்னை போரூரைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர்களான பிரகாஷ் (27), ஜானகிராமன் (25), சிவா (26), சுப்பிரமணி (30), உமாபதி (26) ஆகிய 5 பேரும் தொழில் ரீதியிலான நண்பர்கள். இவர்கள், வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஏலகிரி மலைக்குச் சுற்றுலா செல்வதற்காக நேற்றிரவு காரில் வந்தனர். ஏலகிரியைச் சுற்றிப் பார்த்த பிறகு, இன்று மதியம் சென்னை புறப்பட்டனர். காரை, உமாபதி ஓட்டியுள்ளார். திருப்பத்தூர்-வாணியம்பாடி மெயின் ரோட்டில் அதிவேகமாகச் சென்றபோது, கலந்திரா என்ற இடத்தில் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முகப்பு பகுதி முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. காரில் பயணித்த பிரகாஷ், ஜானகிராமன், சிவா ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுப்பிரமணி படுகாயமடைந்தார். காரை ஓட்டிய உமாபதி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 

பலியான 3 பேர்

படுகாயமடைந்தவரை, ஆம்புலன்ஸ் மூலம் பொதுமக்கள் மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி தகவலறிந்ததும், வாணியம்பாடி தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். லேசான காயத்துடன் நின்றிருந்த உமாபதியிடம் விசாரித்தனர். அப்போது அவர், மதுபோதையில் இருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் உட்பட அனைவருமே மதுபோதையில் இருந்ததாகக் கூறினார். மூன்று உடல்களையும் மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து போதையில் இருந்த உமாபதியிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் கலெக்டர் ராமன்

விபத்து நடந்த பகுதியின் வழியாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் கலெக்டர் ராமன் கார்களில் வந்தனர். கார்களை வழிமறித்த பொதுமக்கள், ``இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகம் நடக்கிறது. விபத்துகளைத் தவிர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர். ``4 வழிச்சாலைப் பணிகள் விரைவில் தொடங்கும். கவலைப்பட வேண்டாம்’’ என்று அமைச்சர் வீரமணி உறுதியளித்துவிட்டுச் சென்றார்.


[X] Close

[X] Close